சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூன் 1) பிரமாண்டமாக நடைபெற்றது. லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம், மிக பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே சூர்யா, மறைந்த நடிகர்கள் மனோபாலா, விவேக், மாரிமுத்து உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் கருதி, இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாகவும் படம் தயாராகி வருகிறது.
இத்திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வரவுள்ள நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரமாண்டமான முறையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிலம்பரசன் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், “ஷங்கர் கூடவே இருந்திருக்கிறேன். இந்தியன் 2 படத்தில் ஷங்கர் அடித்த பால் எவ்வளவு தூரம் போகும் என்று தெரியாது, அந்தளவிற்கு வெற்றியைப் பெறும். ஜெயிலர் படப்படிப்பில் ரஜினி அவர்கள் ஷங்கரை கடின உழைப்பாளி என்று கூறிக்கொண்டே இருப்பார். இவர் ஷங்கரை பாராட்டுகிறாரா அல்லது என்னை திட்டுகிறாரா என்றே தெரியாது.
சிறு வயதில் இருந்தே கமல் அவர்களை பார்க்கும்போது பெரிய வியப்பு இருக்கும். கமல் சாருக்கு தமிழ் எழுத்தில் பிழை இருந்தால் பயங்கர கோபம் வந்து விடும். அப்படிதான் நான் ஒரு முறை தமிழ் எழுத்துப் பிழையில் மாட்டிக்கொண்டேன், அதில் என்னை அவர் திட்டும்போது மகிழ்ச்சி மட்டுமே அடைந்தேன். அந்த நாள் முழுவதும் கமல் சார் திட்டியதை பலரிடம் மகிழ்ச்சியாக கூறினேன்.
இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியான அன்று நான்தான் அந்த நிகழ்ச்சியை (பிக்பாஸ்) இயக்கி வந்தேன்.ஷங்கர் சாரின் ஐ, 2.O படங்களின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியையும் நான் தான் இயக்கினேன். உள்ளே வந்து அமரும்போது இந்த நிகழ்ச்சியையும் நானே இயக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்தேன்” எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்த படத்தின் அறிவிப்பில் இருந்தே இந்தியன் 2 மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளேன். விக்ரம் படத்திற்கான ஒப்பந்தம் நடக்கும் போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றேன். அப்போது இந்தியன் தாத்தா தோற்றத்தில் கமல் இருந்தார். ஒப்பந்தம் கையெழுத்திற்காக கையில் போட்டிருந்த மேக்கப்பை நீக்கி கையெழுத்து போட சில மணிநேரம் ஆனது.
அந்த அளவிற்கு கடின உழைப்பை இந்தியன் 2 படத்திற்காக அவர் செலுத்தி இருந்தார். என்னுடைய படங்களைத் தாண்டி ஒவ்வொரு முறை சங்கர் சாரைச் சந்திக்கும் போதும், அனிருத்தைச் சந்திக்கும் போதும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த அளவிற்கு இந்த படத்திற்காக காத்திருக்கிறேன்.
தமிழ் எழுதுவதில் தவறு செய்து நெல்சன் மாட்டிக்கொண்டது போல, நானும் கமல் சாரிடம் விக்ரம் பட நேரத்தில் மாட்டிக் கொண்டேன். ஸ்கிரிப்ட் பேப்பரை படித்து இதை யார் எழுதியது என்று கேட்கும் போது பெருமையாக நான் தான் என்றேன். உடனே அவர் பெரிய 'ண' சின்ன 'ன' எல்லாம் தவறாக உள்ளது என்றார். அதற்கு அடுத்த நாளில் இருந்து நன்கு தமிழ் தெரிந்த நபரை வைத்து ஸ்கிரிப்ட் எழுதி அவரிடம் கொடுத்தேன்” என்றார்.
பின்னர் பேசிய நடிகர் பாபி சிம்ஹா, “ஷங்கர் சார் படத்தில் நடிப்பதே பெரிய பாக்கியம். அந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. பாய்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடினேன். ஊரில் இருந்து வரும் போது சினிமாவை (தாயை) நம்பி வந்தோம். கமல்ஹாசன் லெஜன்ட்ரி, என் காலேஜ் காலகட்டத்தில் கோவையில் பாய்ஸ் படம் பார்த்தேன், வேற லெவல்.
அதே ஷங்கர் சார் படத்தில் நான் நடிப்பது ரொம்ப சந்தோஷம். நான் 50 படம் வரை நடித்திருக்கிறேன். ஃபிரேமிற்கு நேர்மை என்றால் இயக்குநர் ஷங்கர், அவரை மாதிரி ஒருவரை பார்த்தது இல்லை. ஷங்கர் சாரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்தியன் படத்தை பார்த்து வளர்ந்திருக்கிறேன், இன்று இந்தியன் 2 படத்தில் நானும் இருக்கிறேன்”, என பெருமையோடு கூறினார்.