சென்னை: புது வசந்தம், பூவே உனக்காக, சூர்யவம்சம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி 90களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் விக்ரமன். பல குடும்ப படங்களை எடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றவர்.
இவரது மகன் விஜய் கனிஷ்கா, ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உதவி இயக்குநராக விக்ரமனிடம் பணிபுரிந்தவர். இந்நிலையில், விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ஹிட் லிஸ்ட் என்ற படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தனது ஆர்.கே செல்லுலாய்டு தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, அவரது உதவி இயக்குநர்கள் கார்த்திக் மற்றும் சூர்ய கதிர் இருவரும் இயக்கியுள்ளனர். இப்படத்தில் சரத்குமார், கௌதம் மேனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், சித்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார்.
இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோரை படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகர் விஜய் கனிஷ்கா விஜயிடம் வாழ்த்து பெற்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. அப்போது இயக்குநர் விக்ரமன் மற்றும் விஜய் கனிஷ்கா இருவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மகனைப் பற்றி பேசும்போது இயக்குநர் விக்ரமன் கண்ணீர் விட்டு அழுதார். அதனைப் பார்த்த விஜய் கனிஷ்காவும் அப்பாவை கட்டிப்பிடித்து அழுதது அங்கிருந்த பார்வையாளர்களை நெகிழ வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், “எனது படங்கள் வெளியாகும் போது கூட நான் இவ்வளவு பதற்றம் அடைந்தது கிடையாது. எனது மகனுக்கு சப்போர்ட் பண்ணுங்க” என்றார்.