சென்னை: கோட் படத்தின் கதைக்கும் ராஜதுரை படத்தின் கதைக்கும் ஒற்றுமை இருந்தது எனக்கு கோட் ரிலீசுக்கு பிறகு தான் தெரியும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கோட்' (GOAT). இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கோட் திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வயதான விஜய் கதாபாத்திரத்திற்கு எதிராக அவரது மகன் இளம் விஜய் கதாபாத்திரம் செயல்படுவது போன்று கதைக்களம் அமைந்திருக்கும். ஜீவனாக இளம் விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
#VenkatPrabhu about #GOAT & #Rajadurai Story comparison
— Prakash Mahadevan (@PrakashMahadev) October 17, 2024
pic.twitter.com/9u96TobjOR
இதனிடையே 'கோட்' படம் வெளியான போது இக்கதை விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்தின் கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கிண்டலடித்து வந்தனர். நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1993இல் வெளியான திரைப்படம் ‘ராஜதுரை’. இப்படத்திற்கு விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் கதை எழுதியுள்ளார்.
தற்போது கோட் பட கதை காப்பி என்ற புகார் குறித்து வெங்கட் பிரபு பேசியுள்ளார். அவர் கூறுகையில், “எனக்கு கோட் ரிலீசுக்கு பிறகு தான் அது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருடைய கதை என்று தெரியும். நான் சோஷியல் மீடியா மூலம் கேள்விப் பட்டு தான் ராஜதுரை படத்தை பார்த்தேன்.
இதையும் படிங்க: தியேட்டரில் ரிலீசான படங்கள் பாத்துட்டிங்களா... இந்த வார ஓடிடி ரிலீஸ் என்ன தெரியுமா?
அந்த விஷயம் தெரிந்திருந்தால் ராஜதுரை படத்தை முன்பே பார்த்து ’கோட்’ படத்தை இன்னும் நன்றாக எடுத்திருப்பேன். அப்பா, மகன் மோதல் கதை என்பது உலகளாவிய கதை. சினிமா நிறைய கற்றுக் கொடுக்கும். சில சமயம் ஒரு படத்தின் காட்சியிலிருந்து ஒரு கதை கிடைக்கும்” என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்