சென்னை: இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில், ஃபேண்டஸி காமெடி படமாக உருவாகியுள்ளது, 'டபுள் டக்கர்' (Double Decker) திரைப்படம். இப்படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் இன்று (பிப்.24) நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உடன் இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், 'விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தீரஜ் அழைத்ததால், தவிர்க்க முடியாததால் இங்கு வந்துள்ளேன். தீரன் இதுவரை 500 பேரையாவது காப்பாற்றி இருப்பார். மிகப்பெரிய இதய அறுவை சிகிச்சை மருத்துவர்.
மருத்துவராக இருந்தாலும், கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர். மருத்துவருக்கும், கலைஞர்களுக்கும் வித்தியாசம் இல்லை. மருத்துவர் இதயத்தைப் பிளந்து பிரச்னை இருந்தால் காப்பாற்றுவார். நல்ல கலைஞரும் இதயத்தை திறக்காமல் திறந்து, அதில் உள்ள ரணங்களை ஆற்றுபவர்கள். ஆண்கள் அழுவது அழகானது. உதவி இயக்குநர்கள் அல்லது சினிமாவிற்கு இயக்குநராக வருபவர்கள் ஏதாவது ஒரு படத்தில் வேலை பாருங்கள்” என்று பேசினார்.
இதனிடையே த்ரிஷா பற்றி அவதூறாக அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதாக (Trisha Koovathur Issue) சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் குறித்து மனம் வருந்தினார். இது தொடர்பாக பேசிய அவர், 'ஒரு நடிகை பற்றி அவ்வளவு சுலபமாக பேசிவிடாதீர்கள். இரண்டு முறைதான் த்ரிஷாவை பார்த்துள்ளேன். எளிமையான பெண். நடிகைக்கும் மேல் அவர் ஒரு தாய், ஒரு பெண். ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள்.
நமது வீட்டுப் பெண்ணை பற்றிப் பேசவிடுவோமா? நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், தயவுசெய்து பேசிடாதீர்கள். வாழ்க்கையின் உன்னத நிலையை அடைய கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்காங்க. எல்லோரும் அதனை நாகரீகமாக கடந்து செல்ல வேண்டும். ஒரு பெண்ணை அழவிடக்கூடாது. நாம் எல்லாம் ஆண்களே இல்லை' என்று மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'சினிமாவின் இன்றைய நிலையை பற்றி பேசியவர், ஒரு காலத்தில் சாட்டிலைட் இருந்தது. இப்போது ஓடிடி (OTT) வந்துள்ளது. ஆனால், படங்கள் நம்மால் கொடுக்க முடியவில்லை. தியேட்டருக்கு மக்கள் வரமாட்டேன் என்கிறார்கள். ரொம்ப சவாலாக உள்ளது. ஆனால், இந்த மோதல்தான் நல்ல படத்தைக் கொடுக்க வேண்டிய உத்வேகத்தைக் கொடுக்கிறது' என்றார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.வி.ராஜு சார்பில் வக்கீல் நோட்டீஸ்!