சென்னை: ’கங்குவா’ திரைப்படத்தின் நெகடிவ் விமர்சனம் குறித்து இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார். சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியான நிலையில், எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.
நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கங்குவா குறித்து அதிகமாக மீம்ஸ் பதிவிட்டு வந்தனர். கங்குவா படத்தின் பின்னணி இசை இரைச்சலாக உள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். மேலும் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரம் தவிர படம் நன்றாக உள்ளதாகவும், தேவை இல்லாமல் சமூக வலைதளங்களில் நெகடிவ் விமர்சனங்கள் பரப்பப்படுவதாக கூறியிருந்தார்.
Myskkin Bro is Back… his Opinion about #Kanguva
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 13, 2024
pic.twitter.com/G3xAkEWFpX
கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து ’அலங்கு’ திரைப்பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஒரு கதை வலிமையாக இருக்க வேண்டும் என ஆடியன்ஸ் விரும்புகின்றனர். நம்மை விட ஆடியன்ஸ் 200 மடங்கு சினிமாவை பார்த்து, படித்து வளருகின்றனர்.
ஒரு படம் நன்றாக இல்லை என்றால் ஆடியன்ஸுக்கு கோபம் அதிகமாக வருகிறது. அதனால் தவறாக பேசுகின்றனர். நான் இன்னும் கங்குவா படம் பார்க்கவில்லை, அப்படத்தின் விமர்சனங்கள் வந்தது. விமர்சனத்தை கருணையுடன் கூற வேண்டும். சூர்யா போன்ற நல்ல நடிகரை நாம் பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். நம்மிடம் சிவாஜி, எம்ஜிஆர் இல்லை, அவர்களுடன் நடித்த சிவக்குமார் தான் இருக்கிறார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் ’விடுதலை 2’ படக்குழு: மனசிலாயோ பாடலுக்கு ஆடிய மஞ்சு வாரியர்! - BIGG BOSS 8 TAMIL
அவர்கள் வீட்டிலிருந்து வந்த சூர்யா, கார்த்தியை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் உடனே நான் சூர்யாவிற்கு கதை சொல்ல போகிறேன் என கூறுவார்கள். நான் சூர்யாவிற்கு கதையே சொல்ல மாட்டேன், அவர் படம் கொடுத்தால் கூட இயக்கமாட்டேன். ஒரு படம் இயக்க எவ்வளவு கஷ்டபடுகிறோம் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நாங்கள் படம் இயக்க வாழ்க்கை மறந்து வேலை செய்கிறோம்” என கூறினார்.