சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான நடியத்வாலா சந்தித்துள்ளார். தற்போது, இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இதில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' என்ற படத்தில் மொய்தீன் பாய் என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் பிப்.9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது, ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான நடியத்வாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் " ஜாம்பவான் ரஜினிகாந்த்துடன் இணைந்து பணியாற்றப் போகிறேன், அவருடன் பணியாற்றுவது பெருமையாக உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன், லோகேஷ் கனகராஜ் படம், அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் படம், ஜெயிலர் 2 என அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படங்களுக்கு அடுத்து அல்லது அதற்கு முன்னதாகவோ, பாலிவுட் தயாரிப்பாளரான சஜீத் நாடியவாலாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றா உள்ளதாகத் தகவல்கள் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த் ஏற்கனவே பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். எனவே இது பான் இந்தியா படம் என்பதால் சிறப்புத் தோற்றமா அல்லது முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கைதான ஜாஃபர் சாதிக்..! உண்மை இருக்குமேயானால்..அடுத்து இதுதான் என் முடிவு - இயக்குனர் அமீர் அறிக்கை