சென்னை: ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்ததாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் இயக்குநர் அமீரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை வரும் ஜூலை 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஜாபர் சாதிக் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் அமீர் அவரது வங்கிக் கணக்கில் பெற்றுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில், "போதைப் பொருள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாஃபர் சாதிக் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து 1 கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இந்த தகவல் அமலாக்கத்துறையினரிடம் இருந்து வந்ததாகக் கூறி நேற்றைய முன்தினம் (ஜூலை 23) தனியார் ஊடகத்தில் செய்தி வெளியானது.
அந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கின் துவக்கத்திலிருந்தே NCB மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன். அப்படி இருக்கையில், என்னைப் பற்றி சில தொலைக்காட்சி ஊடகங்களும், சில சமூக வலைத்தள ஊடகங்களும் தவறான தகவல்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு யூடியூபர் தனது சேனலில் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார். சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவித்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைக் கொண்ட இது போன்ற நபர்கள், "இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து..." எப்படியாவது என்னை சேர்த்து கைது செய்து விட வேண்டும் என்று விரும்புவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மத்திய, மாநில அரசுகளோ, தனி நபரோ, மானுடன் சொல்லும் செயல்பாட்டில் ஈடுபட்ட போதெல்லாம், ஒரு சக மனிதனாக, தோழனாக, சுயநல நோக்கின்றி, எனது எதிர் கருத்துக்களையும், போராட்ட செயல்பாடுகளையும் முன்னெடுத்து வந்துள்ளேன் என்பதைத் தவிர என்னிடம் வேறு குறைகள் ஏதும் இல்லை. என்னைப் போன்றோரை கருத்தியல், கொள்கை, கோட்பாடு, சித்தாந்த ரீதியாக எதிர்கொள்வதே சனநாயக மாண்பு, அவதூறுகளின் மூலம் வீழ்த்துவது அல்ல.
எந்த விதமான சட்டவிரோத செயல்களிலோ, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையிலோ நான் ஒரு போதும் ஈடுபட்டது இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இன்று 32 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து.. ஃபெப்சி அமைப்பு அறிவிப்பு! - chennai shooting cancelled