சென்னை: மூன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தில் இயக்குநர் அமீர், அவருக்கு ஜோடியாக சாந்தினி, இமான் அண்ணாச்சி, இயக்குநர் ராஜ்கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், 'உயிர் தமிழுக்கு' படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (புதன்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமீர், இயக்குநர் ஆதம் பாவா உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமீர், "அரசியல் நையாண்டி படம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், யாரையாவது மனதில் வைத்துதான் பேச முடியும்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இங்கு அரசியல் படங்கள் வராததற்கு காரணம் சென்சார் போர்டு தான். கேரளாவில் சென்சார் எளிதாக கொடுக்கப்படுகிறது, ஆனால் இங்கு எதுவும் சொல்லக்கூடாது. இதனை எதிர்த்துப் போராட அமைப்பு இருக்க வேண்டும். படம் எடுத்து விட்டு சண்டை போட முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இருக்கின்ற சென்சார் அதிகாரிகள் மனநிலை தான் படங்களில் பிரதிபலிக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சாதிய வன்கொடுமையிலும் சாதித்த நாங்குநேரி மாணவர் - நேரில் அழைத்து பாராட்டிய பிரபல இயக்குநர்!
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் பொன்னியின் செல்வன், கேஜிஎப் போன்ற படங்களை எடுக்கவில்லை. மாறாக, இது ஒரு சிறிய படம், நிறைய உழைப்பு சின்ன படம் பார்ப்பதுபோல் பாருங்கள். சீமான் படத்தை பார்த்தார், அவருக்கு கனெக்ட் ஆகிவிட்டது. மொழிக்காக உயிர் நீத்தது இந்த மண்ணில் தான்.
பட்டங்கள் தகுதியின் அடிப்படையில் வர வேண்டும். நாம் காசு கொடுத்து வாங்குவது இல்லை. போராளி என்பது பெரிய வார்த்தை. எம்ஜிஆருக்கு மக்கள் தலைவர் என்பது ஏற்புடைய பட்டம். ஆனால், புரட்சித் தலைவர் என்கிற பட்டம் ஏற்புடையதா என்பது கேள்விக்குறி. மக்களுக்கான போராட்டத்தில் களத்தில் கடைசி வரை இருப்போம்.
அரசியல் அடித்தளமே கூட இருப்பவனை ஏமாற்றுவது தான் என்று படத்தில் வசனம் சொல்வேன். ஆனால், இதுபோன்ற காட்சிகள் படத்தில் இல்லை. அரசியல் களத்தில் சீமானின் கருத்துக்கு எதிர் கருத்து, எப்போதும் முதலில் என்னிடம் இருந்துதான் வரும். இருப்பினும், எப்போதும் அண்ணன் தம்பி உறவுதான். இது கட்சியில் இருப்பவர்களுக்கு இன்னும் போய் சேரவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இளையராஜா அப்படி கூறவில்லை..” வைரமுத்து விவகாரத்தில் சீமான் கூறியது என்ன?