சென்னை: நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் தனது திறமையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். குறிப்பாக, இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கடைசியாக நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்த கேப்டன் மில்லர் படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தைத் தானே இயக்கி நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் 'ராயன்' படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா முரளி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் அஷ்வத் காம்போ... டிராகன் படத்தின் புதிய அப்டேட்!
முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு சார்பில் வெளியிட்ட அப்டேட்டில் விரைவில் படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) மாலை படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள், இம்மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என மிரட்டலான புகைப்படத்துடன் அப்டேட்டை வெளியிட்டனர். மேலும், 'ராயன்' படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் முதன்முதலில் இயக்கிய 'பவர் பாண்டி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோல் இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 'ராயன்' படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் உருவாகும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க உள்ளார்.
இதையும் படிங்க: கபடி.. கபடி.. மாரி செல்வராஜ் இயக்கும் - துருவ் விக்ரம் படத்தின் புதிய அப்டேட்!