சென்னை: பிரபல நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படம் நாளை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராயன் தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், வரும் ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்தநாள் வருவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராயன் படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு குறைவாக இருந்த நிலையில், டிரெய்லர் வெளியான பின் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. டிரெய்லரில் வரும் செல்வராகவன் வசனங்கள், தனுஷின் ஆக்ஷன் காட்சிகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஆகியவையால் படம் எப்போது வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ராயன் டிரெய்லர் வெளியாகி 9 நாட்களில் இதுவரை 13 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், ராயன் படத்திற்கு திரையரங்க டிக்கெட் விற்பனை குறித்த தகவலை காணலாம்.
- தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ் மொழியில் மட்டும் மொத்தமாக 3,566 காட்சிகள் திரையிடப்படுகிறது. அக்காட்சிகளுக்கு மொத்தம் 2,56,396 டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் ராயன் திரைப்படம் தமிழில் ரூ.3.50 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
- அதேபோல், தெலுங்கு மொழியில் 1,682 காட்சிகளுக்கு மொத்தம் 48,393 டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் தெலுங்கில் 50 லட்சத்திற்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ராயன் இந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் நிலையில், மொத்தமாக 808 காட்சிகள் திரையிடப்படுகிறது. அந்த காட்சிகளுக்கு 7,843 டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. ராஞ்சனா, ஷமிதாப், அத்ரங்கி ரே ஆகிய திரைப்படங்கள் மூலம் தனுஷ் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மொத்தமாக ராயன் திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும், முக்கிய மாநகரங்களில் சென்னை (40%), புதுச்சேரி (35%), கோவை (26%), திருச்சி (41%) ஆகிய பகுதிகளில் அதிகளவு டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையை விட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் (42%) ராயன் படத்திற்கு அதிக டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேப்டன் மில்லர் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ராயன் வெற்றியை தனுஷ் எதிர்நோக்கி உள்ளார். அதே வேளையில், தனுஷ் நடிப்பில் வெளியான அவரது 25வது படமான 'வேலையில்லா பட்டதாரி' (VIP) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. அதேபோல், தனுஷ் திரை வாழ்க்கையில் ராயன் மைல் கல்லாக அமையுமா என்ற எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: ராயன் ரிலீஸ்; தனுஷ் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலில் வழிபாடு! - RAAYAN RELEASE ON JULY 26