சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள காடு வெட்டி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், ஆர்கே சுரேஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் தென் மாவட்டம். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் ஆர்கே சுரேஷ் இருந்தார்.
மேலும், அந்த போஸ்டரில் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக அவரது பெயர் போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில், “தென் மாவட்டம் படத்திற்கு இசை அமைக்க நான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. இது தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஆர்.கே.சுரேஷ், “யுவன் சார், நீங்கள் எங்கள் படத்திற்கும் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றிற்கும் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். எனவே, தயவுசெய்து ஒப்பந்தத்தை சரி பாருங்கள்” என்று பதிலளித்து உள்ளார். மேலும், தனது ஸ்டூடியோ 9 எக்ஸ் தள பக்கத்தில் மாமனிதன் படத்தின் வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்னையில் உங்களுக்கு பண உதவி செய்து, அந்த சமயத்தில் உங்களுக்கு உற்ற நண்பனாக ஒரே நாளில் பிரச்னையை முடித்தோம். ஒப்பந்தத்தை சரியாக பாருங்கள் சகோதரரே, நன்றி சந்திப்போம் தென் மாவட்டத்தில்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா தற்போது விஜயின் கோட் (GOAT) உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் மோசடி வழக்கில் சிக்கி தற்போதுதான் மீண்டு வந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இருவருக்கும் படம் தொடங்குவதற்கு முன்பே பிரச்னை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: ராமாயண் படப்பிடிப்பு தொடக்கம்? ஷாக் அப்டேட் வெளியிட்ட படக்குழு! இவங்கெல்லாம் வேற படத்துல இருக்காங்களா?