சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஞானவேல் ராஜா, இவரது மனைவி நேஹா. இவர்கள் குடும்பத்துடன் தியாகராய நகரில் வசித்து வருகின்றனர். இவர், 20க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி ஞானவேல் ராஜா மனைவி நேஹாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதில்,நேஹாவிற்கு அதிகப்படியான பரிசு பொருட்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்பாக நகைகள் திருடு போயுள்ளது.
இது தொடர்பாக கடந்த 14ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், நகை திருட்டு விவகாரம் தொடர்பாக, இவரது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த பணிப்பெண் லட்சுமி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதில், நான் நகைகளை திருடவில்லை என லட்சுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், அன்றிலிருந்து அவர் வேலைக்கு வராமல் நின்றுள்ளார். இருப்பினும், விசாரணைக்கு தேவைப்படும் போதெல்லாம் வர வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அவரை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த லட்சுமி, தன்னுடைய வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகைச்சை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பணிப்பெண் லட்சுமியின் மகள் மாம்பலம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேஹா மீது, தனது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் கொடுத்துள்ளார்.
ஞானவேல் ராஜா வீட்டில் மூன்று பணிப்பெண்கள் பணிபுரிவதாகவும், அதில் தன் தாயின் மீது மட்டும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொல்கத்தா ஏர்போர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை ஏர்போர்ட்டில் 5 பாதுகாப்பு - Security Tight At Chennai Airport