கோயம்புத்தூர்: லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தை, தடம், கழக தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். கடந்த ஆண்டு இறுதியில், அசர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
இந்நிலையில், நாள் தோறும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு அப்டேட் விடக் கூறி ரசிகர்கள் பல்வேறு இடங்களில் ஆரவாரம் செய்த நிகழ்வுகளும் அரங்கேறியது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு அஜித் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் அஜிதின் மேலாளர் பதிவிட்டார்.
அந்த வீடியோவில் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித், மற்றும் ஆரவ் ஆகியோர் கார் விபத்திற்குள்ளாகி இருந்தது இடம்பெற்றிருந்தது. நடிகர் அஜித் காரை ஒட்டி வர நடிகர் ஆரவ் அருகில் அமர்ந்திருப்பார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகும். நல்வாய்ப்பாக இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் AirBag ஓபன் ஆகி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்திருப்பர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
மேலும், இந்த வீடியோவிற்கு பல தரப்பினர் பல விமர்சனங்களை அள்ளி தெளித்தனர். இந்நிலையில், கோவை மாநகர காவல்துறையினர் அஜித்தின் இந்த வீடியோவை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உபயோகப்படுத்தியுள்ளனர். கோவை காவல்துறையினர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு வியர் சீட் பெல்ட் (Wear Seatbelt) எனவும் சரி என்ற குறியையும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.