சென்னை: லெமன் லீப் கிரியேஷன்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.ரஞ்சித் தயாரித்து இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் நடித்துக் கடந்த வாரம் வெளியான படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் 'ப்ளூ ஸ்டார்' படத்தின் வெற்றி விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், நடிகைகள் கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை வெற்றிப் படமாக ஏற்றுக் கொண்ட மக்களுக்கு நன்றி.
இந்த படத்தைப் பார்த்துவிட்டு ஒரு பெரிய நடிகர், இயக்குநர் ஜெயக்குமாரிடம் சேர்ந்து படம் பண்ணலாம் என்றார். எனக்கே இதுபோல் நடக்கவில்லை. பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜுக்கு அமைந்தது. தனுஷ் கூப்பிட்டுப் படம் பண்ணலாம்னு சொன்னார். இப்போது இவருக்கு நடந்துள்ளது.
நம்மை நம்புபவர்கள் தான் நம்மிடம் வருவார்கள். ஏனெனில் நாம் பேசும் அரசியல் அப்படி. என்னை ரஞ்சித்தாக மட்டும் இல்லாமல் நான் பேசும் அரசியலோடு தான் என்னைப் பார்க்கிறார்கள். எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ என்ன தேவையோ அதைத் தான் பண்ணுகிறேன். என் உழைப்பையும், நான் பேசும் அரசியலையும் முழுதாக நம்புகிறேன். என் அரசியல் தான் நான். அந்த அரசியல் எப்போதும் என்னை வழிநடத்தும் என்று நம்புகிறேன். அதனால் யாரையும் தேடி நான் போனதில்லை. நான் பேசும் அரசியல் நிறைய பேரை என்னிடம் அழைத்து வந்திருக்கிறது" என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "சினிமாவில் வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடாது. நம் படங்களின் மதிப்பை மக்கள் அங்கீகரிப்பார்கள். உழைப்பில் அவ்வளவு மதிப்பு இருக்கிறது. ப்ளூ ஸ்டார் படத்துக்கு சென்சார் போர்டில் பிரச்சினை வராது என்று நினைத்தேன். நீலம் புரொடக்சன்ஸ் படம் சென்சாருக்கு வரும் போதே அலர்ட் ஆகிடுவாங்க. ப்ளூ ஸ்டார் படத்தை சென்சாருக்கு அனுப்பிய போது ஏமாற்றமாக இருந்தது. படத்தை வெளியிடக் கூடாது என்று பிரச்சினை வந்தது. அதன் பின்னரே சென்சார் சர்டிபிகேட் கிடைத்தது.
வேறுபாடுகளுக்கு எதிராக நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இப்படம் சொல்கிறது. அதைச் சொல்லும் தத்துவத்தைக் கூறும் படத்தை வெளிவரக் கூடாது என்று தடை செய்யும் அளவுக்கு மோசமான சூழல் இருக்கிறது. அதைத் தாண்டி இன்றைக்கு இந்த படம் மக்களிடம் சென்றடைந்து வெற்றி பெற்றிருக்கிறது. அதைப் பார்க்கும் போது நல்ல படம் பண்ணிருக்கிறோம் என்று திருப்தியாக உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சார்பட்டா-2 படத்திற்காக கடினமாக உழைக்கும் ஆர்யா.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!