சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது நாள் அதிரடியாக தொடங்கியது. பிக்பாஸ் ஆரம்ப நாளிலிருந்து ஆண்கள், பெண்கள் என அணி பிரிக்கப்பட்டுள்ளதால் தினமும் குழாய் அடி சண்டைக்கு பஞ்சமில்லை. அதுவும் நேற்று தண்ணீர் எடுக்க கூட பஞ்சாயத்து நடந்தது. கிட்சனில் தண்ணீர் எடுக்க அனுமதி பெற வேண்டும் என ரஞ்சித் போர்க்கொடி தூக்கினார். இதற்கு வழக்கம் போல ஜாக்குலின் ’தண்ணி எடுக்க கூடவா டாஸ்க்’ என வாக்குவாதம் செய்தார்.
பின்பு மளிகை சாமான் விவகாரத்தை கையில் எடுத்த பிக்பாஸ், ஆண்கள் அணியினர் சம்பாதித்த பணத்தை விட அதிகம் பொருட்களை ஸ்டோர் ரூமில் இருந்து எடுத்ததால் அவர்களுக்கு குறைவான மளிகை பொருட்களை வழங்கினார். இது தான் சமயம் என தர்ஷா பிரச்சனையை தொடங்கினார். "நீங்க பண்ண தப்புக்கு நான் கம்மியா சாப்பிடணுமா" என பெண்கள் அணியின் முன் ஆண்கள் அணியை 'லெஃப்ட் அண்ட் ரைட்' வாங்கினார்.
இதுஒரு புறம் இருக்க ”என்னை எந்த டாஸ்க்லையும் சேர்த்துக்க மாட்டிங்களா” என தர்ஷா மீண்டும் பிரச்சனையை கிளப்பினார். இதற்கு முத்துக்குமரன் உட்பட ஆண்கள் அணியினர், ”ஆயிரம் இருந்தாலும் நீங்க பெண்கள் அணியிலிருந்து வந்திருக்கீங்க, உடனேலாம் டாஸ்க்ல இறக்க முடியாது” என்றார். இதனைத்தொடர்ந்து ஆண்கள், வீட்டின் கோட்டை தாண்டி கிச்சனில் நுழைய அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தனர்.
இதனை ஜாக்குலின் மீறியதால் அவருக்கு சுவரை பார்த்து உட்கார வேண்டும் என்ற தண்டனையை வழங்கினர். அதனைத்தொடர்ந்து ஆண்கள் அணியினர் பெண்களில் மூன்று பேர் சுனிதா, ஜாக்குலின், சாச்சனா தேர்வு செய்து இவர்கள் தான் இந்த வாரம் முழுவதும் சமைத்து, பாத்திரம் கழுவ வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்தனர். இதற்கு ”உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா” என சாச்சனா கண் கலங்கினார்.
இந்த விதிமுறைக்கு பெண்கள் அணியின் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க சற்று தளர்வு கொண்டு வரப்பட்டது. இந்த சண்டையில் வீட்டின் கேப்டன் சத்யா, பெண்கள் அணிக்கு ஆதரவாக இருப்பதாக முத்துக்குமரன் தெரிவித்தார். "இது பிக்பாஸ் வீடு இங்க விளையாட தான் வந்திருக்கோம், முடியலன்னா வெளியில போக சொல்லுங்க, எங்கள எப்படிலாம் கலாய்ச்சாங்க தெரியுமா" என முத்து பிடிவாதமாக இருந்தார்.
இதையும் படிங்க: இளம் தலைமுறையின் இசை நாயகன்... ’ராக்ஸ்டார்’ அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷல்!
மறுபக்கம் ரஞ்சித், ஜாக்குலினிடம் சென்று இந்த தண்டனைக்கு நான் காரணம் அல்ல என மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டில் முத்துக்குமரனுக்கு எதிரான மனநிலையில் அனைத்து பெண்களும் உள்ளனர். இதனிடையே இன்று (அக்.16) வெளியான ப்ரோமோவில் ஆண்கள் அணியிலும் முத்துக்குமரனுக்கு எதிராக செயல்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் தர்ஷா ஆண்கள் அணியில் சண்டை மூட்டி வருவது போல் தெரிகிறது. இந்த நிலை மாறுமா, தர்ஷாவின் திட்டம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்