சென்னை: பிரபல தமிழ் சினிமா நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக நேற்று அறிவித்தார். பிரபல இயக்குநர் மோகன் ராஜா சகோதரரான ஜெயம் ரவிக்கும், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகளான ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களது மூத்த மகன் ஜெயம் ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ படத்தில் நடித்தார்.
இந்நிலையில் தற்போது இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வருடம் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் ஜெயம் ரவி பேசுகையில், "நாங்கள் இருவரும் முதலில் ஸ்காட்லாந்தில் சந்தித்து கொண்டோம். பின்னர் காதலித்த போது, சென்னையில் இருவரும் பொது இடத்தில் சந்தித்து கொள்ள மாட்டோம்.
நாங்கள் சினிமா பிரபலங்கள் என்பதால் வெளியில் மீடியாவிற்கு தெரியாமல் இருக்க காரில் இருந்து கொண்டே பேசிக் கொள்வோம். நாங்கள் இருவரும் காதலித்ததை முதலில் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை. பின்னர் குடும்பத்தினரிடம் கூற வேண்டும் என கட்டாயம் வந்த போது, நாங்கள் பேசி திருமணம் செய்து கொண்டோம்" என்றார்
பின்னர் பேசிய ஆர்த்தி "எங்களுக்கு குழந்தை பிறக்கும் போது ஜெயம் ரவி என்னுடன் இல்லை. அவர் ஷூட்டிங்கில் இருந்தார். அவரது வேலையை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் எனக்கு உடல்நலம் பாதிக்கப்படும் போது என்னுடன் இருந்து பார்த்து கொண்டார்.
அவருக்கு ஒரு கணவராக நான் 100 மதிப்பெண்களுக்கு மேல் வழங்குவேன். அவரை போல அனைத்து கணவரும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்" என்றார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி பேசுகையில், "ஆரவ் பிறந்த போது நான் ஆர்த்தியுடன் இல்லை. அப்போது எனது தந்தை தான் குழந்தை பிறந்த செய்தியை என்னிடம் தொலைபேசியில் கூறினார்.
அப்போது உடனே நான் ஆர்த்தி எப்படி இருக்கிறார் என்று தான் முதலில் கேட்டேன்" என்றார். சமீபத்தில் கடந்த ஜூன் மாதம் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் தங்களது திருமண நாளை கொண்டாடினர். பின்னர் ஆர்த்தி தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார்.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் பிரிவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பிரபல தொழிலதிபரை மணக்கிறாரா நடிகை திவ்யா ஸ்பந்தனா? - divya spandana