சென்னை: அருண் விஜய் நடித்துள்ள ’வணங்கான்’ திரைப்படம் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவருக்கு என்னை அறிந்தால் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்த ’விக்டர்’ கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில், 'வணங்கான்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வி ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் பி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் வைரமுத்து எழுதி உள்ளார். இப்படத்தின் சண்டைப் பயிற்சியாளராக சிவா பணியாற்றியுள்ள நிலையில், படத்தொகுப்பு பணிகளை சுதர்சன் கையாண்டுள்ளார்.
பாலா படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அவரது சமீபத்திய படங்கள் ரசிகர்களை கவரவில்லை. அவர் கடைசியாக இயக்கிய வர்மா திரைப்படம் எதிர்ம்றை விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ’வணங்கான்’ படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதலில் சூர்யா நடிக்க இருந்த ’வணங்கான்’ திரைப்படம் அவர் விலகியதை தொடர்ந்து அருண் விஜய் ஒப்பந்தமானார். படத்தில் அருண் விஜய் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதேபோல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருண் விஜய் கையில் விநாயகர் மற்றும் பெரியார் சிலைகளை வைத்திருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் வரவேற்பு பெற்றது. வழக்கமான பாலா படமாக இருக்குமா அல்லது மாறுபட்டு இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்திற்கு திரைப்பட தணிக்கை குழு யு/ஏ தணிக்கை சான்றிதழ் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: 300 கோடி வசூல் செய்து இமாலய சாதனை; எந்திரன், பிகில் சாதனையை முறியடித்த ’அமரன்’!
இந்நிலையில் இன்று அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பொங்கலுக்கு அஜித் நடித்துவரும் ’குட் பேட் அக்லி’, விக்ரம் நடித்து வரும் ’வீர தீர சூரன்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பாலா படமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்