சென்னை: ஆஸ்கார் வென்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமது மனைவி சாய்ராபானுவை 29 ஆண்டுகள் மணவாழ்க்கைக்குப் பின்னர் பிரிகிறார். இது தொடர்பாக பிரபல வழக்கறிஞரும் விருது பெற்ற விவகாரத்து வழக்கறிஞருமான வந்தனா ஷா அறிக்கை ஒன்றின் மூலம் இந்த தகவலை நேற்று உறுதி செய்தார். ஏ.ஆர்.ரகுமான் தம்பதிக்கு ரஹீமா என 2 மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். சாய்ரா பானு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள வழக்கறிஞர் வந்தனா ஷா, இருவரின் உறவில் ஏற்பட்ட உணர்வு பூர்வமான அழுத்தங்களால், இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"பல ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ரகுமானிடமிருந்து பிரியும் இந்த கடினமான முடிவை சாய்ரா எடுத்திருப்பதாகவும், இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தினாலும், கடினமான தருணங்கள் இருவரிடை இட்டு நிரப்ப முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டது" என வழக்கறிஞர் வந்தனா ஷாவின் அறிக்கை கூறுகிறது.
விவாகரத்து குறித்த தகவலை ஏ.ஆர்.ரகுமானும் உறுதி செய்திருக்கிறார். அவர் தமது எக்ஸ் வலைத்தளத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நாங்கள் முப்பதாவது ஆண்டை அடைய வேண்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லா விஷயங்களும் நாம் நினைப்பது போன்று நடப்பதில்லை. உடைந்த இதயங்களின் பாரத்தில் கடவுளின் சிம்மாசனமும் நடுங்கலாம். இருந்தாலும், இந்த நிலையில், வாழ்க்கைக்கான சரியான அர்த்தத்தைத் தேட முடிவு செய்துள்ளோம். ஆனால், உடைந்த துண்டுகள் தங்கள் இடத்தை மீண்டும் பெற முடியாது என்பதே உண்மை. எங்கள் நண்பர்களுக்கு, அவர்கள் பகிரும் அன்புக்கும் நன்று. இந்த சூழலை நாங்கள் கடந்து செல்லும்போது, எங்கள் தனியுரிமையை மதிப்பதற்கும் நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு:
ரகுமான் தம்பதியினர் திருமணம் முடிந்து 29 ஆண்டுகால வாழ்வை நிறைவு செய்த பின்னர் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளனர். இந்த அறிவிப்பு உலகளவில் உள்ள ரகுமானின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மகன் ஏ.ஆர்.அமீன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்த பதிவு ஒன்றை வெளியிட்டு விவாகரத்து தகவலை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஐ. உதவியுடன் அறிக்கையா? :
இதனிடையே ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து அறிவிப்பு குறித்த சமூகவலைத்தள பதிவில், #arrsairaabreakup என்ற ஹஷ்டேக் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வின் உணர்ச்சிகரமான முடிவை அறிவிக்கும் போது Hashtag பயன்படுத்தி எப்படி எழுத முடிகிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த பதிவை எழுதியது உண்மையில் ரகுமான் தானா அல்லது ஏ.ஐ. பயன்படுத்தி அவரது அட்மின் எழுதினாரா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்