சென்னை: இந்திய சினிமாவின் பெருமையாக பார்க்கப்படுபவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து அவரது மகன் ஏ.ஆர்.அமீன் இசைத்துறையில் நுழைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் எந்திரன், பொன்னியின் செல்வன் பாகம் 2 உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள 'மின்மினி' என்ற படத்தில் இசை அமைப்பாளராக கதீஜா அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூலை 24) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் ஹலிதா ஷமீம், இசை அமைப்பாளர் கதீஜா ரகுமான், இயக்குநர் நித்திலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கதீஜா ரகுமான், "இது நடக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை. ரொம்ப நன்றி. இயக்குநர் ஹலிதா 2022ஆம் ஆண்டு என்னை அணுகினார். அப்போது நான் தயாராக இல்லை. அதற்குள் படம் முடிந்து ரிலீஸ் ஆகியிருக்கும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், அவருக்கு எனது வேலை பிடித்துவிட்டது. உங்களுடன் தான் வேலை செய்வேன் என்றார். அவருடன் வேலை செய்தது கடினமாக இருந்தது என்று நான் சொல்ல மாட்டேன். 8 மாதம் நன்றாகப் போனது. என்னை மொத்தமாக மோல்ட் செய்தார். நீங்கள் படத்தில் இருக்கிறேன் மட்டும் சொல்லுங்க, நான் உங்களுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்றார். அவருக்கு என்ன வேண்டுமோ அதில் தெளிவாக இருந்தார். அது எனக்கு சுலபமாக இருந்தது.
இதனை அடுத்து, இயக்குநர் ஹலிதா முதலில் ட்ரைலர் கட் கொடுத்தார். அப்பவே நான் பயந்துபோய் என்னால் பண்ண முடியாது என்று எனது கணவரிடம் கூறினேன். அதற்கு அவர் தயவுசெய்து விட்டுவிடாதே காத்திரு என்றார். ஸ்டூடியோவில் இருக்கும் நண்பர்கள் எல்லோரும் நாங்கள் கூட இருக்கிறோம், நீ பண்ணு என்று சொன்னார்கள். இதன் பிறகு எட்டு மாதம் நான் நேரம் எடுத்துதான் பண்ணுவேன் என இயக்குநர் ஹலிதாவிடம் கூறினேன். ஹலிதாவும் எனக்கு நேரம் கொடுத்தார்.
நான் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டபோது நிறைய பேர் ஏன் இவருக்கு வாய்ப்பு கொடுத்தீங்க என்று கேட்டனர். அது என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அப்போது முடிவு செய்தேன், எனக்கு வாய்ப்பளித்த எனது இயக்குநருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கேஜிஎபில் இணையும் நடிகர் அஜித்! 3 வருடம் கால்ஷீட் கேட்கும் பிரசாந்த் நீல்! அப்ப குட் பேட் அக்லி?