சென்னை: இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’லால் சலாம்’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ’மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது, "இந்த இடத்தில் நான் நிறைய பேச ஆசைப்படுகிறேன். நான் இயக்கிய 3 படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் துணை இயக்குநராக பணி புரிந்தார். இந்த கதையை இரண்டு, மூன்று நடிகர்களிடம் கூறியுள்ளேன். கதையை கேட்டு ரஜினி இருக்கிறாரா என்றெல்லாம் கேட்டுவிட்டு நடிக்க மாட்டேன் என மறுத்தனர்.
மேலும் பலரும் மதம் சம்பந்தப்பட்டதாக உள்ளது என்று கூறி நிராகரித்தார்கள். அப்பாவிடம் கதையை காண்பித்தேன். அப்பா தானே நடிப்பதாக சொன்னார். 35 வருடங்களாக அப்பா சம்பாதித்த பெயரை உடைக்க கூடாது என்று இருந்தேன். ஆனால் அப்பா இந்த கதை பிடித்து அவராக நானே நடிக்கிறேன் என்று கூறினார்.
வி.ஐ.பிக்களுக்கு எல்லாம் எளிதில் கிடைக்கும் என்று நினைக்கிறவர்கள் எல்லாம் முட்டாள்கள். புது முகங்களுக்கு கூட எளிதில் அனைத்தும் கிடைத்து விடும். ஆனால் எங்கள மாறி ஆளுங்களுக்கு கிடைக்கிறது தான் கடினம். படத்தோட ஷூட்டிங்கில் செஞ்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது. அனைவரும் தன் வீட்டு குழந்தையை போல் பார்த்து கொள்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் குழந்தை மாதிரி. எல்லா புது தொழில்நுட்பதையும் தெரிந்து வைத்திருப்பார். இரவில் தான் இசை அமைப்பார். என் குழந்தைகள் தான் எனக்கு கிடைத்த வரம். பொண்ணுக்கு ஒரு கஷ்டம் என்றால் பணம் கொடுக்கலாம், ஆனால் அவர் எனக்கு படம் கொடுத்து உதவி இருக்கிறார். இந்த படத்தை அவர் எனக்காக ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த படம் சொல்ல வரும் கருத்துக்காக தான் நடித்தார். சங்கி என்ற வார்த்தை முதலில் எனக்கு தெரியாது, அதை பற்றி தெரிந்த பிறகு ரொம்ப வேதனை அளிக்கிறது. என் அப்பா சங்கி கிடையாது என்பதை ஒரு இயக்குநராக சொல்ல பெருமைப்படுகிறேன் மேலும் ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் ஏன் ’லால் சலாம்’ போன்ற படத்தில் நடிக்கணும். சங்கியாக இருந்தால் அவர் இந்த படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படத்தை பண்ண முடியாது. ஒரு மனித நேயரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும். இந்த படத்தை அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டார்கள். நீங்க எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை பெருமைப்படுத்த வேண்டும். ரஜினிகாந்த் சங்கி இல்லை” என்று பேசினார்.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரெபெல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!