மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிவது வழக்கம். இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நடிகை நமிதா தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த கோயில் அதிகாரி ஒருவர் நடிகை நமீதாவை தடுத்து நிறுத்தி, தாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவரா என கேட்டதோடு, அதற்கான சான்றையும் காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நமீதாவும் அவரது கணவரும் தாங்கள் பிறப்பிலேயே இந்து எனவும், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்து வந்த நமீதா, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகி, தான் இந்து என்பதற்கான சான்று கேட்டு பிரச்சனை செய்ததாக பதிவிட்டுள்ளார். நடிகை நமீதா வெளியிட்டுள்ள பதிவில், “நான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட மதுரை வந்துள்ளேன். இன்று காலை மீனாட்சி அம்மன் கோயில் சென்ற போது அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது.
நான் பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளேன். ஆனால் மீனாட்சியம்மன் கோயில் அதிகாரி ஒருவர், என்னிடமும், எனது கணவரிடமும் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். அவர் எங்களிடம் நீங்கள் இந்து என்பதற்கான சான்று காண்பிக்க வேண்டும் என்றும், ஜாதி சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என்றும் பிரச்சனை செய்தார்.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் நமீதா இந்து என்பது தெரியும். என் குழந்தையின் பெயர் கூட கிருஷ்ணா தான். பெரிய இடத்தில் இருந்து கொண்டு மரியாதை குறைவாக பேசும் அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சேகர் பாபுவிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார். நடிகை நமீதா மதுரை கோயிலில் தரிசனம் செய்ய தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும்" - யுவன் சங்கர் ராஜா! - yuvan adviced school students