திருவள்ளூர்: சின்னத்திரை நடிகை, நடனக் கலைஞர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது நாசரேத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ராவின் பெற்றோர் குற்றம்சாட்டியதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், ஹேம்நாத் பிணையில் வெளியில் வந்தார்.
இது தொடர்பான வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சித்ராவின் மரண வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வழக்கானது மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி முன்னிலையில் இன்று (ஆக.10) விசாரணைக்கு வந்துள்ளது. இதில், இரு தரப்பும் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பல்வேறு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், சித்ராவின் மரணத்திற்கும் அவரது கணவர் ஹேம்நாத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என சாட்சிகள் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டதால் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, "கடந்த டிசம்பர் 9, 2020 ஆம் ஆண்டு அன்று சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் எதிரியாக சேர்க்கப்பட்டார். 2020 முதல் இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக அனைத்து சாட்சிகளும் முறையாக விசாரிக்கப்பட்டது.
தொடர்ந்து எதிரியின் மீது குற்றம் சாட்டப்பட்ட சாட்சிகள் நிருபிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் ஹேம்நாத் மீது 498A, 306 ஐபிசி பிரிவின் படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இதில், முழுமையான விசாரணைகள் நடைபெற்று சாட்சியங்களின் அடிப்படையில், அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் இன்று நீதிமன்றம் அவருக்கு விடுதலை அளித்து தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கிற்கும் ஹேம்நாத் எந்த தொடர்பும் இல்லை.
இந்த வழக்கில் புகார்தாரரான சித்ராவின் பெற்றோர்கள் விரும்பினால் மேல்முறையீடு செய்வார்கள். இந்த வழக்கில் இதுவரையில் மொத்தம் 56 சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. இதில், சாட்சிகள் போலீசார் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூப்பிக்கவில்லை" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் ஹேம்நாத் விடுதலை! - Actress Chithra Death Case