சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் தனது அரசியல் கட்சியினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் விஜய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வரும் மார்ச் மாதத்திற்குள் முடித்துவிட்டு, இந்த ஆண்டு மற்றொரு படத்தையும் (தளபதி 69) முடித்து, பின்னர் தீவிரமாக அரசியலுக்குள் நுழைவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த திரைப்படம் ஒரு அறிவியல் புனைக்கதை என்றும், இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்தில் நடிகை சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், லைலா, வைபவ், மோகன், ஜெயராம் மற்றும் அஜ்மல் அமீர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், எடிட்டர் வெங்கட் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜயின் புதிய கீதை படத்திற்குப் பிறகு, மீண்டும் யுவன் சங்கர் ராஜா, விஜய் இணைந்துள்ளனர். இந்த நிலையில், விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கும் நிலையில், முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்குகிறார் என்று பேசப்பட்டது.
தற்போது ஆர்.ஜே.பாலாஜி இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார். அவரது இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில், “நடிகர் விஜய்யைச் சந்தித்து கதை சொன்னேன், அது ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைப் பற்றிய படம். ஆனால், திரைக்கதை அமைக்க ஒரு ஆண்டுகள் ஆகும் என்று சொன்னேன்” என ஆர்ஜே பாலாஜி பேசியிருந்தார். தற்போது ஆர்.ஜே பாலாஜியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவரிடமும் முழுக்கதையையும் தயார் செய்யும்படி விஜய் கூறியுள்ளதாகவும், கடைசியில் எந்த கதை பிடித்திருக்கிறதோ, அதில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்: போலீஸ் உடையில் மிரட்டும் ரஜினிகாந்த்! ரசிகர்களுக்கு கையசைத்த வீடியோ வைரல்!