சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மகாராஜா திரைப்படம் தமிழ் தவிர உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி சினிமாவில் நலிந்த கலைஞர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் உடன் அதிக படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெனாலி. இவரது மகன் வின்னரசன், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் பிசியோதெரபி படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று, வின்னரசனுக்கு கட்டணம் செலுத்த முடியாதது குறித்து கூறியுள்ளார். உடனடியாக நடிகர் விஜய் சேதுபதி, 76 ஆயிரம் ரூபாய் கல்லூரி கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் தெனாலி, என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது என நன்றியோடு தெரிவித்தார். இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. நடிப்பை தாண்டி நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்து வரும் நடிகர் விஜய் சேதுபதியின் இந்த செயல் திரையுலகினர் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விக்ரமின் அசாத்திய நடிப்பில் வரவேற்பை பெறும் தங்கலான்... முதல் நாள் வசூல் எவ்வளவு? - thangalaan collections