சென்னை: விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இதில் படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் தனஜெயன் உள்ளிட்ட படக் குழுவினரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும், பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி மற்றும் தயாரிப்பாளர் டி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “நானும், இயக்குநர் விஜய் மில்டனும் 20 வருட நண்பர்கள். நாங்கள் அப்போதே இணைந்து தொழில் செய்ய திட்டமிட்டோம். விஜய் மில்டன் இயக்குநர் பாதையை தேர்ந்தெடுக்காமல் ஒளிப்பதிவாளராகவே இருந்திருந்தால் இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளராக இருந்திருப்பார்.
விஜய் மில்டன் எழுதிய கோயம்பேடு என்ற ஒரு கதையை நான் படித்திருக்கிறேன். நான் அதில் நடிப்பதாகவும் இருந்தது, ஆனால் அது நடக்கவில்லை. அதுதான் கோலிசோடா படமாக வெளிவந்தது. இதுவரை நான் செய்த படங்களில் மிகப்பெரிய அளவில் வந்திருக்கக்கூடிய படமாக இந்த 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை பார்க்கிறேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, மழை பிடிக்காத மனிதன் படக்குழுவினருடனான கேள்வி பதில் நேரத்தில், பெரிய ஹீரோக்கள் இவ்வாறு மேக்கப்புடன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை, நீங்கள் இப்படி வந்ததற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு, “இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இந்த படத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிறார்கள் என்பது தெரியும். இந்த நேரத்தில் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்கள். நேரம் இல்லாத காரணத்தினால் மட்டுமே படப்பிடிப்பிலிருந்து இப்படி வந்திருக்கிறேன்” என்றார்.
தமிழ் சினிமாவில் நல்ல சகுணம் பார்ப்பதுண்டு. தலைப்பு சரியாக இருக்க வேண்டும் என்று பார்ப்பதுண்டு. அடுத்தடுத்த படங்களில் உங்களது தலைப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “இனியும் எனது படங்களின் தலைப்பு கரடு முரடாக இருக்கும் என்று பதில் அளித்தார். சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு சென்டிமென்ட் கிடையாது. ராகு காலம் என்பது கெட்ட நேரம் என்றால் அந்த நேரத்தில் நான் பாடம் ஆரம்பித்து காட்டுகிறேன்.
ராகுகாலம், எமகண்டம் ஆகிய தலைப்புகளில் கூட நான் படம் பண்ணத் தயார். இதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன் இது என்னுடைய தலைப்பு” என பதில் அளித்தார். ஏற்கனவே ஒரு விபத்தைச் சந்தித்தவர் நீங்கள் இந்த திரைப்படத்தில் ஒரு கார் கடலில் மூழ்குவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது, அது எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, “சினிமாவைப் பொறுத்தவரை இயக்குநரும், தயாரிப்பாளரும் எங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். நேரத்திற்கு உணவுக்கு அழைத்து விடுகிறார். வீட்டிலிருந்து பிக் அப் அண்ட் ட்ராப் செய்து விடுகிறார். படக்குழுவினர் பத்திரமாக பாத்துக் கொள்வார்கள்” என்றார்.