கோயம்புத்தூர்: அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கோவை, சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் விஜய் ஆண்டனி லைவ் கான்டஸ்ட் நிகழ்ச்சி குறித்தும், விஜய் ஆண்டனி நடித்து ரம்ஜான் அன்று வெளியாகவுள்ள ரோமியோ (Romeo) படம் குறித்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி உள்ளிட்ட ரோமியோ படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, "ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவையில் நிகழ்ச்சி நடந்தது. அதற்குள் அடுத்த நிகழ்ச்சி கோவையில் நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் உள்ளது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, மக்களுக்காக யார் சேவை செய்கிறார்களோ, உழைக்கிறார்களோ அவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவர்கள் தான் வரவேண்டும் என்பது இல்லை என்றார். தொடர்ந்து, சிறிய படங்களுக்குத் திரையரங்கு கிடைப்பதில்லையே என்ற கேள்விக்கு, சின்ன படமோ.. பெரிய படமோ கதை நல்லா இருந்தால் படம் வெற்றி பெறும்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நான் போன்ற படங்கள் சிறிய படங்கள் தான். ஏன் தற்போது வெளியாகி உள்ள மஞ்சுமோல் பாய்ஸ் படத்திற்கு எந்தவிதமான ட்ரெய்லர், போஸ்டர், புரமோஷன்ஸ் நடத்தவில்லை. இருந்தும் மக்கள் அதனை விரும்பி பார்க்கிறார்கள். நல்ல படம் வெளியிடுவதற்குத் திரையரங்கம் தேவையில்லை சமூக வலைதளங்கள் போதும். அதுமட்டுமின்றி, தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள பலர் சிறிய படங்களில் நடித்தவர்கள் தான்.
வாக்கு செலுத்துவது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கட்டாயமாக வாக்கு செலுத்த வேண்டும். நமக்குப் பிடித்தவர்களுக்கு வாக்கு செலுத்துவதை விட நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்று அறிந்து வாக்கு செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்கிறார்கள், ஒரு அரைமணி நேரம் யோசித்து விட்டு வாக்கு செலுத்துங்கள். எதிர்காலம் நல்லா இருக்கும். ஆனால் தயவு செய்து நோட்டோவில் மட்டும் ஓட்டை போடாதீர்கள். நோட்டோவில் ஓட்டை போட்டு வீணடிக்காதீர்கள்.
நடிகர்கள் மட்டுமல்ல அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், மக்களுக்கு நன்மை செய்வதற்கு அரசியல் வந்துதான் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெருத்தெருவாக சென்று கூட மக்களுக்கு நல்லது செய்யலாம் என்றார்.
பின்னர் பிச்சைக்காரன் 1 போல் இன்னொரு படம் வருமா? என்ற கேள்விக்கு, நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆயிடுமா, அதேபோல தான் ஆயிரம் படம் எடுத்தாலும் பிச்சைக்காரன் படத்துக்கு ஈடாகாது. பிச்சைக்காரன் திரைப்படம் அம்மாவை முழுமையாகக் குறித்த கதையாக இருந்தது போல் ரோமியோ படமும் ஒரு கணவன் மனைவிக்கு இருக்கும் பழக்கவழக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது, நிச்சயம் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்" எனத் தெரிவித்தார்.