சென்னை: இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஓம் நமச்சிவாய' என்ற பாடல் ஒலித்தது. ஓம் நமச்சிவாய என்றவுடன் அது ஆன்மீகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அதை ஒரு கமர்ஷியல் ரிதமாக மாற்றி இசையமைத்திருந்தார் அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா. இதையே பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கி இருந்தார் என்றால் படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் சிறப்பாக உருவாக்கி இருப்பார். அதனால் இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி என்று சொன்னால் வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிப்பவர் என்ற ஒரு எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இவர் எல்லா படங்களையும் ஒப்புக்கொண்டு நடிப்பவர் அல்ல என்பது ரசிகர்களுக்கும் தெரியும். ஏதாவது வித்தியாசம் இருந்தால் தான் இவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால், அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆலன் திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்.
இந்த படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த வெற்றிப் பயணத்தை மாற்றிக் கொள்ளாமல் புதிய முயற்சிக்கு மேற்கொள்ளுங்கள். இதுவும் காதல் கதை தான். ஆனால் இதிலும் கமர்ஷியல் கலந்திருக்கிறது.
இதையும் படிங்க : "மதமும் சாதியும் மனிதர்களை வெறுக்க வைக்கும்"... பயணம் குறித்து அஜித் பேசிய வீடியோ வைரல்!
இங்கு பேசியவர்களில் பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தா பேசியது எனக்கு புரியவில்லை. இருந்தாலும் ரசித்தேன். அவர் முதலில் எழுதிய கவிதை என்று ஒரு கவிதையை வாசித்தார். அது எனக்கு புரியவே இல்லை. ஏனென்றால் சொற்கள் புதிதாக இருந்தது. பிறகு பத்து வருடம் கழித்து கவிதை எழுதினேன் என்றார். அதுவும் எனக்கு புரியவில்லை. ஆனால், இறுதியில் ஒரு கவிதையை வாசித்தார். அது எளிதாக இருந்தது. அனைவருக்கும் பிடித்திருந்தது.
உண்மையில் கதை என்பது நம்முடைய வாழ்வில் இருந்து எடுப்பதுதான். ஒவ்வொருவரும் கதாசிரியர்கள் தான். அவர்களுடைய வாழ்க்கையில் பாதித்த விசயத்தை நினைவுபடுத்தி எழுதினால் அதுவே சிறந்த கதையாக இருக்கும்.
சினிமாவிற்கு வரும்போது ஒன்று அல்லது இரண்டு கதைகள் உடன் வந்தால் போதும். அதன்பிறகு இங்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து கதையை உருவாக்கிக் கொள்ளலாம். என்னிடம் முதலில் சுவரில்லாத சித்திரங்கள் கதை மட்டும் தான் இருந்தது. அதன் பிறகு தான் ஒரு கை ஓசை படத்தின் கதை உருவானது. அதன் பிறகு மௌன கீதங்கள், இப்படி படிப்படியாக அனுபவங்களின் மூலம் கதைகளை உருவாக்கினேன்.
நம் வாழ்க்கையை பார்ப்பதும் ஒன்றுதான். புத்தகங்களை படிப்பதும் ஒன்றுதான். ஏனெனில் ஒருவன் தன் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருக்க முடியாது. ஆனால் புத்தகங்களை படிக்கும் போது தான் அந்த கதாசிரியர், அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பார்.
நான் என் வாழ்க்கையில் ஜெயகாந்தன் கதைகள், கல்கியின் கதைகள் ஆகியவற்றை படித்திருக்கிறேன். இது போன்ற ஏராளமான புத்தகங்களை படிக்கும் போது புதிய, புதிய கதாபாத்திரங்கள் கிடைக்கும். அதேபோல் கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கடைசி வரை நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கும். இன்று கூட ஆலன் என்றால் என்ன? என்று எனக்கு தெரியவில்லை.
இது தொடர்பாக சிவாவிடம் கேட்டபோது ஆலன் என்றால் சிவன் என்றார். இது எனக்கு ஒரு புது விசயமாக இருந்தது. இந்தப் படம் காதலும், ஆன்மீகமும் கலந்த படம். இந்த படத்தின் முன்னோட்டத்தில் ஒரு வசனம் வரும். எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ.. அதுவே ஆன்மீகம் இதுவும் என்னைக் கவர்ந்தது" என்று பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்