கேரளா: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து 233 பக்கங்கள் கொண்ட நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையை சில நாட்களுக்கு முன் கேரள அரசு வெளியிட்டது. இந்த அறிக்கையில் பல பிரபல மலையாள நட்சத்திரங்கள் பெயர்கள் அடிபட்டுள்ளன. இந்த விவகாரம் மலையாள திரைத்துறையில் புயலை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து மலையாள திரைத்துறையில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், ”குற்றம் சாட்டப்பட்டவர் இந்த விவகாரத்தில் விலகி இருப்பது பாரபட்சமற்ற விசாரணைக்கு உதவும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும். அது தான் உரிய நெறியாகும்.
அரசு நியமித்துள்ள விசாரணை குழு தேவைப்பட்டால் அறிக்கை வெளியிடும். தான் வேலை செய்யும் இடத்தில் அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும். பெண்கள் அனைத்து வேலைகளிலும் பாதுகாப்பற்ற சூழலை சந்தித்து வருகின்றனர். அனைத்தும் மாற வேண்டும். விசாரணை நடத்துவதற்காக தான் இங்கு சட்டங்களும், நீதிமன்றங்களும் உள்ளன.
நடிகைகளுக்கான பாலியல் வன்கொடுமை மலையாள திரைத்துறையில் மட்டுமே இருப்பதாக கூறுவது தவறு. இங்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால் வெளியில் தெரிந்துள்ளது. அனைத்து விதமான துறையிலும் பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருகிறது. அதுகுறித்து தகுந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
டொவினோ தாமஸ் தற்போது ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஓணம் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படும் இப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: படிப்புடன் பார்ட் டைமில் மூட்டை தூக்கும் மாணவன்.. வைரல் வீடியோவை பார்த்து ஓவர் நைட்டில் உதவி செய்த விஜய்! - vijay helps kovilpatti student