சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தை விளம்பரப்படுத்த படக்குழு இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 11500 திரைகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் 3டி டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, “இன்று கமல்ஹாசன் பிறந்தநாள். ராஜபார்வை படத்திற்கு வணிக வெற்றி கிடைக்கவில்லை. அதே வருடத்தில் இந்தியில் ஒரு படம், பின்னர் நாயகன், பேசும்படம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் நான் நடிக்கும் போது அவர் 50 வயதில் பத்து வேடங்களில் தசாவதாரம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். என்னைவிட 20 வயது மூத்தவரான கமல் சார், தான் நடிக்கும் 10 வேடங்கள் குறித்து அப்போது என்னிடம் காண்பித்து கொண்டிருந்தார். கமல்ஹாசன் நம் தமிழ் சினிமாவின் அடையாளம். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
சந்திரலேகா, ஔவையார் போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்துள்ளனர். இந்த காலத்தில் நாங்கள் எடுத்துள்ள படம் தான் கங்குவா. இந்த படத்தை எடுக்க ஞானவேல் தட்டாத கதவுகள் இல்லை. ஞானவேல் மற்றும் எனது ரசிகர்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. கங்குவா ஒரு கூட்டு முயற்சி. யாருமே காசுக்காக, கடமைக்காக இதனை எடுக்கவில்லை. இந்திய சினிமாத்துறையில் அனைவரும் வாய் பிளந்து ஆச்சர்யத்துடன் பார்க்கப் போகிறார்கள்.
இதையும் படிங்க: உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்: ’தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நான் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தை 3டியில் பார்த்த நியாபகம் உள்ளது. இப்போது என் படமும் 3டியில் வெளியாவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தில் சண்டை மட்டும் இல்லாமல் வெளியிலும், மனதுக்குள் நடக்கும் போர் பற்றி பேசுகிறது. இப்படம் மன்னிப்பு பற்றி உயர்வாக பேசும். கங்குவா திரைப்படம் நெருப்பு மாதிரி இருக்கும். இரட்டை தீபாவளியாக இருக்கும்” என்று பேசினார். நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ’சூர்யா 44’ படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்