சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்து நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் கருடன். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூரியுடன் இணைந்து சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, வடிவுக்கரசி, ரோஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கருடன் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உல்ளனர். இதனிடையே படத்தின் கதாநாயகன் சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் படம் பார்க்க வந்த நடிகர் சூரி, உன்னி முகுந்தன், இயக்குநர் துரை செந்தில், ஷிவதா ஆகியோரை ஆரவாரத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர். முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த சூரி, "கருடன் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என நினைக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சிக்கு பிறகு அடுத்தடுத்த காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தது. குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து படத்தை பார்க்கின்றனர். காமெடியனாக நடித்த நீங்கள் தற்போது ஹீரோவாக நடிக்கிறீர்கள் என கேட்டபோது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது, வேறு ஒரு பயணத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்து பயணிக்கவும் தயாராக இருக்கிறேன்.
இதற்கு காரணம் முதல் படத்தில் அறிமுகப்படுத்திய வெற்றிமாறன், அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அடுத்து காமெடி கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்பீர்களா என கேட்ட போது, ஹீரோ நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்படியே செல்வோம். கதைக்காக தான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் எனக் கூறினார்.
திரைப்பட நடிகர்கள் தொடர்ந்து சொன்ன நேரத்தை விட தாமதமாக வருவது குறித்து கேட்ட போது, சொன்ன நேரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் நாகரிகம், ஒன்று இரண்டு நபர்களிடம் நாம் கூறும் நேரம் கடந்து பத்திரிகையாளர்களை வந்து சேரும் போது நேரம் தாமதமாகிறது என நான் கருதுகிறேன் என்றார். தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கேட்ட போது, மக்களுக்களுகான முடிவாக இருந்தால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.
தொடர்ந்து, தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பது குறித்து கேட்ட போது, என்னைப் பொறுத்தவரையில் கதைக்களத்தை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறேன். என்னுடைய கதைக்கு சரியானதாக இருந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன்.
உங்களுக்கும் ஒரு கதை அமைந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் நடிக்கலாம். நகைச்சுவை நடிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும், சூரியின் இடத்திற்கு இன்னொரு நடிகர் வருவார், அவரை பின்தொடர்ந்து மேலும் நடிகர் வருவார். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் காமெடி நடிகராக வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த உங்கள் பார்வை என்ன? - வாணி போஜனின் பதில் இதுவா? - Vani Bhojan