சென்னை: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனி பிரசாத் லேபில் இன்று (மே 29) நடைபெற்றது.
விழாவில் பேசிய சத்யராஜ், "கூலி திரைப்படத்தில் நான் ரஜினிகாந்த்துடன் நடிக்கிறேன். ஆனால், மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நான் நடிக்கிறேன் என்பதை தயாரிப்பு நிறுவனமே முறையாக அறிவிக்க வேண்டும் என நினைக்கிறேன். மோடி வாழ்க்கை வரலாற்றில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை.
மணிவண்ணன் போன்று இயக்குநர்கள் எடுத்திருந்தால் நன்றாக இருக்கும். உள்ளதை உள்ளபடி எடுக்கும் எந்த இயக்குநராக இருந்தாலும், நான் நடிக்க தயாராக உள்ளேன். அதேபோல் வெற்றிமாறன்,பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்ற இயக்குநர்கள் எடுத்தால் நான் நிச்சயம் நடிப்பேன்” என்றார்.
இந்த திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்துள்ள பாடலான 'உறவுகள் தொடர்கதை' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயனிடம் கேட்டபோது, "அந்த பாடலுக்கு உரிமம் வாங்கியுள்ள நிறுவனம், இளையராஜா என இருவருமே உரிமத்தை கேட்டு வருகின்றனர். அதனால் அதை சரி செய்வதற்கான வழிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்", என தெரிவித்தார்.
விழாவில் தொடர்ந்து பேசிய விஜய் ஆண்டனி, “இசையும், வரியும் கணவன் மனைவி போல. அதில் இருவரில் யார் பெரியவர் என்று பார்க்கக்கூடாது. இரண்டுமே முக்கியம் தான். ஒரு நிகழ்ச்சியில் பேசப்பட்ட ஒரு வார்த்தையை தவறுதலாக புரிந்துகொண்டு பரப்பி வருகிறார்கள்” என பேசினார்.
இதையடுத்து வெற்றிமாறன், பா.ரஞ்சித் படங்கள் எடுக்கக்கூடாது என சிலர் பேசுகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சத்யராஜ், “கருத்து சுதந்திரம், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, "நடிகராக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து, இசையில் கவனம் செலுத்த முடிவதில்லை. இந்த வருட இறுதியிலிருந்து இசையில் கவனம் செலுத்த உள்ளேன். அந்த பாடல் உரிமம் பெறுவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் முயற்சி செய்து வருகிறார்கள்.
மேலும், அவரது இசை கம்பெனியில் உள்ள பாடலாக இருந்தால், அவர் நிச்சயம் உரிமம் கேட்கலாம், மற்ற பாடல்களுக்கு அவரிடம் ஒரு ஒப்புதல் வாங்கினாலே போதுமானது. புளூ சட்டை மாறன் நல்ல மனிதர் தான், அவர் வேலையை அவர் செய்கிறார், என் வேலையை நான் செய்கிறேன். அவர் நல்ல விதமாக பேசினால் யாராவது பார்ப்பீர்களா, இவ்வாறு பேசுவதால் தான் அதிகமாக பார்க்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.