தூத்துக்குடி: கோவில்பட்டியில் நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில், ரயில் நிலையம் அருகில் 'தலைக்கவசம் உயிர்க்கவசம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசத்தை (ஹெல்மெட்) வழங்கி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இதில் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வன சுந்தர், நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் அமலதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதனை வலியுறுத்தும் வகையிலும், வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்புடன் செல்வதை அறிவுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ்நாடு முழுவதும் எனது ரசிகர் மன்றம் மூலமாக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
என்னைப் போன்ற நடிகர், பிரபலமானவர்கள் கூறும்போது மக்களிடம் எளிதாகச் சென்றடையும். நடிகர் விஜய்யுடன் நடிக்கும் GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. நானும், சகோதரர் விஜய்யும் நடிக்கும் திரைப்படத்திற்கு மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது மட்டுமின்றி, மக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் சூப்பர் என்று கூற வேண்டும் என்பதற்காக, இது போன்ற பிரமாண்டமான திரைப்படங்களை செய்து கொண்டிருக்கிறோம். தமிழில் மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிப்பது, கல்லூரி வாசல் திரைப்படத்தில் இருந்து தொடங்கிவிட்டது.
தற்போது நான், சகோதரர் விஜய், பிரபுதேவா எல்லோரும் இணைந்து நடிக்கின்றோம். மிகவும் சந்தோஷமாக உள்ளது, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.
திரைப்படத்துறையில் இருந்து எம்ஜிஆர், என்டி ராமாராவ், விஜயகாந்த் போன்று, நடிகர் விஜய் அரசியலில் சாதிப்பாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பது நல்ல விஷயம். அதற்கான பதில் மக்கள்தான் சொல்வார்கள். தற்போது நான் ஒரு நடிகன், மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன்.
நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் முடிவு செய்யும். சாதாரண மனிதனாகவும் இருந்து மக்களுக்கு சேவை செய்யலாம். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் தற்போதைக்கு எனக்கு இல்லை. நடிகர் விஷால் கட்சி ஆரம்பித்தால், அதுவும் நல்ல விஷயம்தான்” என்றார்.
தொடர்ந்து, இன்னும் நடிகர்கள் திரைப்படம் வெளியாவதில் இடையூறு இருப்பதாக கூறப்படுவது பற்றிக் கேட்டதற்கு, “நீங்கள் சொன்னதை நான் ஒரு செய்தியாக எடுத்துக் கொள்கிறேன். தான் நடித்துள்ள அந்தணன் திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில், அதிகமான நட்சத்திரங்கள் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய முதல் படத்தில் எப்படி ஒரு புது நடிகனாக இருந்தேனோ, அதே போன்று இப்போதும் புது நடிகனாகத்தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
நடிகை த்ரிஷா பற்றிய விமர்சனங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நடிகை என்பதை விட, அவர் முதலில் ஒரு பெண், நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். யாராக இருந்தாலும் அப்படி பேசியது மிகவும் தவறு. நாம் யாரையும் குறைத்தோ, தவறாகவோ பேசக்கூடாது. மக்கள் நல்லது நடந்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள், மக்களை ஏமாற்ற முடியாது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் வரிசையில் மலையாள சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் பிரேமலு!