சென்னை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், காமெடியன், யூடியூபர் என தமிழ் திரைத்துறையில் பன்முகத்தன்மை கொண்ட மனோபாலாவின் நினைவு தினம் இன்று. தமிழ் திரைத்துறையில் 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கிய மனோபாலா எண்ணற்ற படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
திரையில் மனோபாலா தோன்றினால், அவரது டயலாக் டெலிவிரியும், பாடி லாங்குவேஜும் அனைவரையும் ரசிக்க வைத்தது. கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த மனோபாலா, கடந்த ஆண்டு மே 3ஆம் தேதி காலமானார். இந்நிலையில், மனோபாலாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், நடிகரும், நடிகர் சங்க உறுப்பினருமான பூச்சி முருகன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
அதில், “மனோபாலா மறைந்து ஓராண்டு ஆகிறது. இன்றைக்கு மீண்டும் தொடங்கி இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிக்கு மனோபாலாவும் ஒரு முக்கிய காரணம். ஈகோ பார்க்காமல் எல்லா முன்னணி நடிகர்களிடமும் உதவி கேட்போம் என்று வற்புறுத்தி வந்தவர். தான் முன்நின்று செய்யவும் ஆர்வமாக இருந்தார். மனோபாலாவுடன் பழகியது பள்ளி, கல்லூரி நட்பை போல மிகவும் நெருக்கமானது. அவரைப் போல விரைவில் உயரத்தை தொட்டவரும் இல்லை.விழுந்தவரும் இல்லை. விழுந்தவர் மீண்டும் மீண்டும் போராடி மீண்டு எழுந்து வந்திருக்கிறார்.
பட வெளியீட்டில் நிலவிய சிக்கல், அதில் முடங்கிய கோடிகள் கூட மனோபாலாவை முடக்கவில்லை. சங்க செயற்பாடுகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அத்தனை ஈடுபாடு காட்டியவர். அவரை பொறுத்தவரை எது நடந்தாலும் இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும். முடங்கி விடக் கூடாது. அந்த போராட்ட குணத்தை பார்த்து வியந்து இருக்கிறேன்.அந்த வகையில் அவர் ஒரு போராளி தான். மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்டபோது அத்தனை நம்பிக்கையாக அதனை எதிர்கொண்டவர்.
நல்ல நண்பன் என்றும் சொல்லலாம், மூத்த சகோதரன் என்றும் சொல்லலாம். உறுதுணையாக இருந்த அவரது இடத்தில் ஆள் இல்லாமல் தவிக்கிறேன். தயவுசெய்து உணவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பல முறை கெஞ்சி இருக்கிறேன், திட்டி இருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு இட்லி, அரை கப் தயிர் சாதம் என்று சுருக்கிக் கொண்டே வந்தார். அதுவே உடல்நலக் குறைவுக்கு காரணமாகி விட்டது.
கடைசியாக சந்தித்தபோது விரைவில் மீண்டு வாருங்கள். நிறைய வேலைகள் இருக்கிறது என்றேன். கை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினார். நடிகர் சங்க கட்டடப் பணிகளைக் காணும்போது எல்லாம் அவர் காட்டிய தம்ஸ் அப் தான் நினைவுக்கு வருகிறது. மிஸ் யூ மனோபாலா சார்” என மனோபாலாவுடன் இருந்த தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.