ஹைதராபாத்: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், பாபுராஜ் உள்ளிட்ட பலர் மீது மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் தலைவர், நடிகர் மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தனர். நடிகர்கள் பதவி விலகளுக்கு நடிகை பார்வதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். நடிகைகளுக்கான பிரச்னை விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பதவி விலகுவது கோழைத்தனம் என பார்வதி கூறினார்.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகரும், முன்னாள் மலையாள நடிகர் சங்கத் தலைவருமான மோகன்லால் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “மிகப்பெரிய மலையாள திரைத்துறையில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். சமீபத்தில் எழுந்த பாலியல் பிரச்னை குறித்து AMMA (Association of Malayalam Movie Artists) பேசவில்லை.
நடிகர்கள் சங்க நிர்வாகக் குழு, ஹேமா கமிட்டி மூலம் வழங்கப்பட்ட புகார்களால் ராஜினாமா செய்தது. இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நான் மலையாள சினிமாவில் அதிகாரம் கொண்ட எந்த குழுவையும் சேர்ந்தவர் அல்ல, மேலும் அவ்வாறு அதிகாரம் கொண்டவர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது மலையாள சினிமா எடுத்த நல்ல முடிவாகும்” என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'கோட்' பட டிக்கெட் விலை 700 ரூபாயா?... தமிழ்நாடு விநியோகஸ்தர் கூறுவது என்ன? - GOAT Ticket booking