சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் கவின். டாடா, ஸ்டார் போன்ற படங்களின் மூலம் இளைஞர்களைக் கவர்ந்த கவின், தற்போது இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் 'ப்ளடி பெக்கர்' (Bloody Beggar) திரைப்படத்தில் நடித்துள்ளார். சிவபாலன் இயக்குநர் நெல்சனின் உதவியாளர் ஆவார்.
இப்படம் வரும் தீபாவளியன்று (அக்.31) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் கவின், "இந்த படம் உருவானதற்கு ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட நம்பிக்கை தான் காரணம். முதல்முறை சிவபாலன் கதை கூறும்போது, இயக்குநர் நெல்சன் ஒழுங்காக பண்ணிடுவியா? எனக் கேட்டார். எதற்காக இப்படி கேட்கிறார் என்ற கேள்வி இருந்தது. பிறகு என் மொத்த திறமையும் இந்த திரைப்படத்தில் காட்ட வேண்டும் என முடிவு செய்தேன். இங்கிருந்துதான் நாம் அனைத்தையும் கற்றுக்கொண்டு வெளியே சென்றேன். மீண்டும் இவர்களுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இதையும் படிங்க: "மாளிகையில் பிச்சைக்காரன்" - வெளியானது கவினின் ப்ளடி பெக்கர் ட்ரெய்லர்!
சிவபாலன் இயக்கும் முதல் திரைப்படத்தில், நெல்சன் தயாரிக்கும் முதல் படத்தில் நான் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படத்தின் கதை மிகவும் இயல்பான கதைக்களம் தான். இந்த திரைப்படத்தில் அனைத்து நடிகை, நடிகர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் இந்த இரண்டு திரைப்படம் வேறு வேறு கதை அம்சம் கொண்டது. தீபாவளி பண்டிகைக்கு ஏற்ற திரைப்படமாக இது இருக்கும்.
அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'அமரன்' திரைப்படம், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் 'பிரதர்' திரைப்படமும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த திரைப்படத்தின் 'ப்ளடி பெக்கர்' என்ற தலைப்பு இயக்குநர் நெல்சன் கொடுத்தது தான். அடுத்தடுத்து அறிமுக இயக்குநர்களுடன் தான் வேலை பார்க்க இருக்கிறேன். ஏனென்றால், அறிமுக இயக்குநர்களுக்கு பொதுவாக புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால்தான் புது இயக்குநர்களுடன் இணைந்து வேலை பார்க்க விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்