சென்னை: நடிகர் கவின், சிவகார்த்திகேயன் போலவே தனியார் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இதன்படி, வெள்ளித்திரையில் விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் நடித்தார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் மூலம் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
லிஃப்ட் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மேலும், இவர் நடித்த டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில், நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
'பியார் பிரேமா காதல்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ.ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் பி.வி.எஸ்.என்.பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பி.ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி வெகுவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. அதிலும், நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. டிரெய்லரிலும் ரசிகர்களைக் கவரும் பல காட்சிகள் இடம் பிடித்திருப்பதால், இதற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் மே 10ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோட் இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியீடு - ரகசியம் உடைத்த வெங்கட் பிரபு! - Goat Second Single Release Date