சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68ம் ஆண்டு பேரவைக் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், "சிறப்பான முறையில் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பொதுக்குழுவாக மட்டுமல்லாமல் மூத்த கலைஞர்களை கௌரவிப்போம். அந்த வகையில், 10 கலைஞர்களை பாராட்டி கௌரவித்துள்ளோம். மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாங்கள் தான் அறிவிப்போம்.
மேலும், உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். நடிகர் சங்கத்தின் கால நீட்டிப்பை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். பாலியல் தொடர்பான புகார் வரும்போது நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் ஏன் தயாரிப்பாளர்களிடம் செல்கிறோம் என்றால் அப்படி புகார் தெரிவிக்கும் போது நேரடி பாதிப்பு தயாரிப்பாளர்களுக்கு தான் போகும். அதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என்பதற்காக தான் அவர்களிடம் செல்கிறோம்" என்று பேசினார்.
பின்னர் நடிகர் விஷால் பேசும்போது, "பாதிக்கப்பட்டவர்கள் வந்து புகார் கொடுக்கும் பொழுது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்களிடம் நேரடியாக புகார் கொடுக்க வேண்டும். எங்ககிட்ட சொல்லுங்கள், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தற்பொழுது வரை புகார் எதுவும் வரவில்லை வரக்கூடாது என்பதுதான் எனது ஆசை.
தேர்தலை சந்திக்க பயமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாஸ், தேர்தல் நடத்தும்போது செலவு அதிகமாகும். அந்த பணத்தை இந்த சங்கத்திற்கு செலவு செய்யலாம் என தெரிவித்தோம். தேர்தல் வரும்போது அதனை சந்திக்க உள்ளோம்" என்று நடிகர் கருணாஸ் பதிலளித்தார்.
இதையும் படிங்க : "பாலியல் தொல்லையா.. புகாரளியுங்கள் நிச்சயம் நடவடிக்கை"- நடிகர் நாசர்! - Actor Nassar