சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.. நடிகர் கார்த்திக் ரசிகர்கள் எதிர்ப்பு..! - karthik fans oppose sivakarthikeyan
Amaran Movie issue: அமரன் என்ற பெயரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தைத் தென் தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என நடிகர் கார்த்திக்கின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Published : Feb 20, 2024, 3:43 PM IST
|Updated : Feb 21, 2024, 10:02 AM IST
திருநெல்வேலி: தமிழ் சினிமா நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் சார்பில் பட்டப்பெயர்கள் சூட்டப்படுவது வழக்கம். 1990களில் உச்சத்தில் இருந்த நடிகர்களில் ஒருவரான கார்த்திக்கை அவருடைய ரசிகர்கள் 'நவரச நாயகன்' என அழைத்து வந்தனர். பெயருக்கு ஏற்றார்போல் கார்த்திக் தனது நடிப்பில் நவரசங்களையும் வெளிப்படுத்துவார். குறிப்பாகக் கதாநாயகனாக இருந்தும் முழுக்க முழுக்க நகைச்சுவை தன்மையோடு மிக எதார்த்தமாக நடிக்கக்கூடிய திறமை இவரிடம் உண்டு.
இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 1992ஆம் ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் நடிகர் கார்த்திக்கின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கே ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்திக், கதாநாயகியாக பானுபிரியா ஆகியோர் நடித்திருந்தனர்.
குறிப்பாக அமரன் என்ற வார்த்தை தென் மாவட்டங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெயராகக் கருதப்பட்டது. மேலும் அச்சமூகத்தை மையப்படுத்தியே இப்படம் அமைந்ததாகவும், அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. நடிகர் கார்த்திக் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதே சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக இப்படத்தில் வரும் 'வெத்தலை போட்ட சோக்குல' என்ற பாடல் அப்போது பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் வரும் அவரது 21வது படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு அமரன் எனப் பெயர் வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதே சமயம் நடிகர் கார்த்திக்கின் ரசிகர்கள் 'அமரன்' பெயரைப் பயன்படுத்தக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து நெல்லையைச் சேர்ந்த நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகரும், கார்த்திக் நடத்தி வரும் மனித உரிமை காக்கும் கட்சியின் மாவட்டத் தலைவருமான துர்கைலிங்கம், ஈடிவி பாரத் தளத்திற்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில், "ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு அமரன் எனப் பெயர் சூட்டி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நவரச நாயகன் கார்த்திக் நடித்த அமரன் திரைப்படம் அவரது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படமாகும். அமரன் என்றால் தென் தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தின் எழுச்சி படமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இப்பெயரைப் பயன்படுத்தினால் சிவகார்த்திகேயனுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும், எங்கள் எதிர்ப்பை மீறி இத்திரைப்படத்தைத் தொடர்ந்தால் தென் தமிழகத்தில் எந்தத் திரையரங்கிலும் அப்படத்தை வெளியிட விடமாட்டோம்.
குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு அமரன் என இப்படத்திற்குப் பெயர் வைத்துள்ளதாகக் கருதுகிறோம். இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் நீதிமன்றத்திற்குச் சென்று இப்படத்திற்குத் தடை வாங்கவும் தயங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். அமரன் என்ற திரைப்படத்தின் பெயரில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு நடிகர் கார்த்திக்கின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: திமுகவிற்கு அடுத்த எய்ம் நாடாளுமன்றமே! அமைச்சர் உதயநிதியை குஷிப்படுத்திய நெல்லை திமுக எம்எல்ஏ..!