பெரம்பலூர்: பெரம்பலூரில் ஆண்டுதோறும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் சார்பில் 'நட்சத்திர கலை விழா’ நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சி கடந்த பிப்.27ஆம் தேதி தொடங்கி, மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கலை விழாவில், கலைத்துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஐகானிக் விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்படுகிறது. இதில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினரான பத்மஸ்ரீ டாக்டர் நர்த்தகி நடராஜ்-க்கு கலைத்துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக இன்ஸ்பிரேஷன் ஐகான் விருதும், ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் ஏ.டி.பத்ம சிங்குக்கு சேஞ்ச் மேக்கர் விருதும், மருத்துவர்கள் ஆசிக் நிமத்துல்லா, என்.கணேஷ், ஜே.ராஜேஷ் ஆகியோருக்கு சமூக மேம்பாட்டுக்கான விருதும் நேற்று (பிப்.28) நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்ச்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், மேடையில் பேசிய நடிகை பவானி சங்கர், "இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தற்கு ரொம்ப சந்தோஷம். கல்லூரி விழா என்பது ஒரு சிறப்பு வாய்ந்ததாகும். கல்லூரி விழா எப்போதும் ஒருவகையான எனர்ஜியை கொடுக்கும்" என்றார்.
அதன்பின் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், தான் நடிக்கும் லப்பர் பந்து படத்திற்கும், திருச்சிக்கும் சம்பந்தம் உள்ளது எனவும், உங்களுடைய அன்புக்கு ரொம்ப நன்றி எனவும், அன்பை மட்டும் பகிருவோம் எனவும், உங்கள் அன்புக்கு நன்றி என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து விழாவில் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கலியபெருமாள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், இன்று (மார்ச்.1) நடைபெறும் நிகழ்ச்சியில் பாடகர்கள் ஸ்வேதா மோகன் மற்றும் ஸ்ரீ நிஷா, பிரியா ஜெர்சன் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: காவல்துறை விசாரணைக்கு தயார்.. ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீண்டும் விளக்கம்!