சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இருப்பவர் விஷ்ணுவர்தன். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ்ப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
இதில் மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்க, அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 'நேசிப்பாயா' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேசிப்பாயா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
A tale of love beyond measures and morals ❤#ArjunDiya will sweep you off your feet
— XB Film Creators (@XBFilmCreators) June 28, 2024
Presenting #NesippayaFirstLook🥀
A @vishnu_dir film#VV10 #Nesippaya@_akashmurali @AditiShankarofl @realsarathkumar #PrabhuGanesan @khushsundar @kalkikanmani @thisisysr @XBFilmCreators… pic.twitter.com/CCpAwSxK4s
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் நடிகை நயன்தாரா, ஆர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நடிகை நயன்தாரா, நடிகர் ஆர்யாவிற்கு நன்றி. எங்கள் குடும்பத்திற்கே உணர்ச்சிவசமான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும் போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் கரியரில் அது சிறந்த படம் எனும் போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்து பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை.
ஆகாஷை பெரியளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸை திரையில் சரியாக கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் சரியான இயக்குநர் விஷ்ணுவர்தன் தான் என என்னுடைய மகள் முடிவெடுத்து அவரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். விஷ்ணுவர்தனும் படத்தை சிறப்பாக எடுத்துள்ளார். அதிதியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். யுவன் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படம் நன்றாக வர வாழ்த்துக்கள்" என்றார்.
படத்தின் கதாநாயகன் ஆகாஷ் முரளி பேசும் போது, "இந்த விழாவிற்காக நேரம் எடுத்து என்னை அறிமுகப்படுத்திய நடிகை நயன்தாராவிற்கு நன்றி. என்னுடைய தயாரிப்பாளர் பிரிட்டோ, சினேகாவுக்கு நன்றி. என்னுடன் நடித்த அதிதிக்கு நன்றி. ஆரம்பத்தில் நடிப்பதற்கு நடுக்கமாக இருந்தது. அவர் தான் என்னை கூல் செய்தார். இயக்குநர் விஷ்ணுவர்தன், அனுவர்தன், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. யுவன் சங்கர் ராஜா இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்" என்று பேசினார்.
நடிகர் அதர்வா முரளி பேசும்போது, "என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதேநேரம் எமோஷ்னலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. என்னுடைய முதல் படமான 'பாணா காத்தாடி'யில் யுவன் இசையமைத்ததால் சந்தோஷமாக இருந்தேன். அதேபோல, ஆகாஷ் படத்திற்கும் யுவன் இசையமைத்துள்ளது சந்தோஷமாக உள்ளது. நான் அறிமுகமாகும் போது அப்பா உயிருடன் இருந்தார். அந்த நேரத்தில், அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை.
ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும் போது தான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது, எனக்கு இப்போது மிகவும் எமோஷ்னலாக உள்ளது. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷ்னலாக இருந்தோம். அப்போது ஆகாஷ் தான் எனக்கு ஆறுதல் சொன்னார். இப்போது அவர் ஹீரோவாக அறிமுகமாவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும், எனக்கும் எவ்வளவு அன்பும், ஆதரவும் கொடுத்தீர்களோ, அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: திருமணம் முடிந்த கையோடு குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்திய உமாபதி - ஐஸ்வர்யா தம்பதி! - Umapathy and Aishwarya visit Temple