சென்னை: சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில், வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. “போர்” திரைப்படத்தை டி சீரியஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை சஞ்சனா நடராஜன், "ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் எங்களுக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறீர்கள். அதற்காக பிரத்யேக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். "போர்" திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். முதலில் படத்தின் இயக்குநர் பிஜோய் நம்பியார் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு கொடுத்தார்.
என்னுடைய கேரக்டரை மட்டும் சொல்லாமல், படத்தில் வரும் மற்ற இரண்டு கேரக்டர்கள் பற்றியும் என்னிடம் விரிவாக கூறினார். நான் கதை கேட்கும்போது, படத்தில் இப்போது எந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேனோ, அந்த கதாபாத்திரத்தைத்தான் பின் தொடர்ந்தேன்.
ஜகமே தந்திரம் மற்றும் சார்பட்டா பரம்பரையில் பார்க்காத சஞ்சனாவை, நீங்கள் நிச்சயமாக இப்படத்தில் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். எல்லோரும் அர்ஜூன் தாஸின் குரலைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவரின் நடிப்பை பற்றி யாரும் பேசுவதில்லை. அவர் மிகவும் சின்சியரான நடிகர்.
நாயகன் அர்ஜூன் தாஸ் பேசும்போது, "இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த பிஜோய் நம்பியார்-க்கு என் முதல் நன்றி. எனக்கு இப்படத்தின் கதையை ஒரு ஹோட்டலில் வைத்துதான் கூறினார். அதற்கு முன்னரே காளிதாஸ் படத்தில் புக் ஆகி இருந்தார். படப்பிடிப்பின்போது இயக்குநர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். பொதுவாக இரு மொழிகளில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கும்போது, ஒரு மொழியில் நடிப்பவர்களுக்கு பிற மொழியில் எடுக்கப்பட்ட காட்சிகளை காட்டமாட்டார்கள். ஆனால், பிஜோய் எங்களுக்கு அதையும் காட்டிவிட்டு இயல்பாக நடிக்கச் சொன்னார்.
படத்தில் எங்கள் அனைவருக்கும் பேருதவியாக இருந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. காளிதாஸ் படப்பிடிப்பில் இருப்பதால் இங்கு வர முடியவில்லை. அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பும், நன்றியும் கேட்டுக் கொள்கிறேன். போர் திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. கொண்டாட்டத்திற்கான திரைப்படம், நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர் மது சாருக்கு நன்றி.
பிரத்யேக உதவிபுரிந்த சிகைக் கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர்களுக்கு நன்றிகள். காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால், கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால், படப்பிடிப்பு தளத்தில் நடிக்க செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான்.
ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி காளிதாஸ் மிகச்சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது. கைதி 2 படத்திற்கு லோகேஷ் என்னை அழைத்தால் நன்றாக இருக்கும். நல்ல வேளை அந்த எல்சியூவில் நான் சாகவில்லை, கூப்பிடுவார்கள் என்று நம்புகிறேன். நடிகர்கள் விஜய், கார்த்தி, கமல் ஆகியோருடன் நடித்தது யாருக்கும் கிடைக்காத பாக்கியம்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டப்பிங் யூனியன் தேர்தல்; தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராதா ரவி!