சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவரது ரசிகர்கள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம் சில சமயங்களில் விமர்சனத்துக்குள்ளாகி வந்தன.
சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது 'வலிமை அப்டேட் வேண்டும்' என ரசிகர்கள் கூச்சலிட்டனர். அதேபோல் கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் கிரிக்கெட் போட்டியின்போது 'வலிமை அப்டேட்' வேண்டுமென கூச்சலிட்ட வீடியோக்கள் அந்த சமயம் வைரலாகின.
அதுமட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது 'அப்டேட்.. அப்டேட்..' என கேட்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. தற்போது ஒரு படி மேலே சென்று 'கடவுளே அஜித்தே' எனக் கூறி வருகின்றனர்.
From The Desk of AK pic.twitter.com/0W4dspCg26
— Suresh Chandra (@SureshChandraa) December 10, 2024
தியேட்டர்கள், பொதுவெளிகள் என எங்கு சென்றாலும் அங்கேயும் இதேபோல் கூச்சலிட்டு வருவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். சமீபத்தில் கூட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் 'கடவுளே அஜித்தே' என ரசிகர்கள் கூச்சலிடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் சார்பில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க.... அஜித்தே' என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை.
இதையும் படிங்க : டிவி சீரியல்களில் வரம்பு மீறும் ஆபாசம்! தணிக்கைக் குழு அமைக்க நீதிமன்றத்தில் மனு!
எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள்
ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்" என அஜித் குமார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. விடாமுயற்சி படத்தை இயக்குநர் மகிழ் திருமணியும், குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கி வருகின்றனர். சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.