சென்னை: ஆசிரியர் தேர்வு வாரிய பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்கு தேர்வு செய்து அளிக்கப்பட்ட 231 நபர்கள், சென்னைப் பள்ளிகளில் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணிகளுக்காக 3,192 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 13ஆம் தேதி வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பிறதுறை பள்ளிகளில் காலியாக இருக்கும் 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியருக்கான பணியிடங்களுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில், தமிழ் மொழி திறன் அறிவிற்கான 30 கேள்விகள் - 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்திலிருந்து (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) 150 கேள்விகள் - 150 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான வினாக் குறிப்புகளை பிப்ரவரி 19ஆம் தேதி https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது. அந்த வினாக் குறிப்புகள் மீது சந்தேகங்கள் இருந்த தேர்வர்கள், பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
எழுத்து தேர்வு முடிவுகள்:
2023ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான ஒஎம்ஆர் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியம், 2024 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி இணையதளத்தில் மற்றும் மே 22ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.
சான்றிதழ் சரிபார்க்கும் பட்டியல்:
தேர்வு எழுதிய தேர்வர்களின் ஒஎம்ஆர் மதிப்பெண்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டில் (2) தகுதிபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்களை (Weightage marks) சேர்த்து, மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டது. அதனடிப்படையில், பாடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்களோ அதுவும் சீண்டல்கள்தான்; அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்பு கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணித் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னையில் மே 30, 31ஆம் தேதிகள் மற்றும் ஜூன் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் பட்டியலை அனுப்பி வைத்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த பட்டியலின் அடிப்படையில் ஆதிதிராவிடர் நலத்துறையில் 18 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இனி காலேஜுக்கு மாணவர்கள் மட்டுமில்ல ஆசிரியர்களும் லேட்டா போகக்கூடாது.. உயர்கல்வித்துறை நடவடிக்கை!
தற்போது, சென்னை பெருநகர மாநகராட்சிப் பள்ளிகளில் 231 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் விரைவில் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அதிகளவில் ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பள்ளிக்கல்வித்துறையின் நியமனம் நீதிமன்ற வழக்கின் தீர்பிற்காக உள்ளது" என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்