மதுரை: மதுரை சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு 2024ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் பள்ளிச் செயலாளர் வெங்கட்நாராயணன், பள்ளித் தலைமை ஆசிரியை வித்யாவதி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர் முரளிதரனுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கொளரவப்படுத்தினர்.
கடந்த 38 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் முரளிதரன், கரோனா காலங்களில் ஆட்டோமொபைல் தொடர்பாக வீடியோக்களை பதிவு செய்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இவரது ஆசிரியர் பணியை பாராட்டி 2021ஆம் ஆண்டு மாநில அரசு இவருக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஆசிரியர் முரளிதரன் அளித்த பேட்டியில், "கடந்த 38 ஆண்டுகளாக டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி (ஆட்டோ மொபைல்) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். மிகவும் கஷ்டப்பட்ட ஏழை மாணவர்களுக்கு தொழிற்கல்வியை கற்று கொடுத்துள்ளேன்.
மதிப்பெண் குறைந்த மாணவர்கள் சமூக விரோதச் செயலுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி கவுன்சிலிங் கொடுத்து கற்றுக் கொடுத்தேன். பள்ளியில் நான் செய்த சின்ன சின்ன வேலைகள் சாதனைகளாக மாறி தேசிய நல்லாசிரியர் விருதாக கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
கல்வி மட்டும் சொல்லி கொடுக்காமல் கவுன்சிலிங் கொடுத்து கற்பித்தேன். கரோனா காலத்தில் வீடியோ மூலம் கற்றுக் கொடுத்தேன். தினமும் இரண்டு முதல் 4 வீடியோ பதிவேற்றம் செய்தேன். புத்தகத்தை வீடியோவாக மாற்றினேன். அதோடு, பார்வையற்றோருக்காக ஆடியோ மூலம் பதிவேற்றம் செய்தேன். இப்படி 60க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்து மாணவர்களை படிக்க வைத்தேன்.
மேலும், பாடம் மட்டும் நடத்திவிட்டுச் செல்லாமல் அவர்களுக்கு கவுன்சிலிங் தரவேண்டும். மாணவர்களிடம் அன்பாக பேச வேண்டும். அன்பாக பேசினாலே மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதை கேட்பார்கள். ஏழை மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கியதன் மூலம், அவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்து சர்வதேச அளவில் பணியாற்றி புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள்.
இந்த விருதை எனது குடும்பம் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கிறேன். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். மாணவர்களுக்காக நான் செய்த பணிகளை தொடர்ந்து செய்வேன்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : "மாணவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" - நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர் கோபிநாத்! - National Teachers Award 2024