சென்னை: கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 877 அரசு ஆரம்பப் பள்ளிகளில், 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக, வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் படிப்பதும் தெரியவந்துள்ளது. அதற்கு காரணம், பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதையே பெற்றோர்கள் விரும்புகின்றனர் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்லூரி திட்ட இயக்குநரகம் 2023 - 24ஆம் கல்வியாண்டின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு கழிவறைகளை பராமரித்தல், கழிவறையை சுத்தம் செய்வதற்கான பொருட்களை வாங்குதல், பள்ளிகளை பராமரிப்பு செய்வதற்கான பொருட்களை வாங்குதல், பிற செலவுகள் என்று மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகளுக்கு நிதி வழங்கி உள்ளார். தற்போது மாணவர்களின் எண்ணிக்கையுடன் இயங்கக்கூடிய அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 10 ஆயிரத்து 861 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 30 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். அது குறித்த விபரங்கள் பின்வருமாறு:-
வ.எண் | மாவட்டம் | பள்ளிகள் |
1. | திருப்பூர் | 546 |
2. | ஈரோடு | 509 |
3. | திண்டுக்கல் | 496 |
4. | ராமநாதபுரம் | 475 |
5. | திருவண்ணாமலை | 468 |
6. | புதுக்கோட்டை | 409 |
7. | சிவங்கை | 463 |
8. | சேலம் | 401 |
9. | தஞ்சாவூர் | 395 |
10. | நாமக்கல் | 399 |
11. | கிருஷ்ணகிரி | 399 |
12. | கரூர் | 327 |
13. | தருமபுரி | 346 |
14. | திருச்சிராப்பள்ளி | 334 |
15. | திருவள்ளூர் | 393 |
16. | விழுப்புரம் | 394 |
17. | கடலூர் | 330 |
18. | தூத்துக்குடி | 353 |
19. | விருதுநகர் | 348 |
அதேபாேல், 30 மாணவர்கள் முதல் 100 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 12,937 என்பதும், 100 முதல் 250 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 6,262 என்பதும் தெரியவந்துள்ளது. 250 மாணவர்கள் முதல் ஆயிரம் மாணவர்கள் வரை உள்ள பள்ளிகள் எண்ணிக்கை 1,145 என்ற அளவிலும், ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகள் வெறும் 12 தான் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த 12 பள்ளிகளைப் பொறுத்தவரை, சென்னை மாவட்டத்தில் 7, திருப்பூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பள்ளியும் உள்ளன. தற்போது, தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 31 ஆயிரத்து 217 பள்ளிகளில் 10 ஆயிரத்து 861 பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கின்றனர். இந்த நிலையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் உள்ள பள்ளிகளில் கடந்தாண்டு படித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 6,254 அரசுப் பள்ளிகளில், 30 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. அதில், நீலகிரி மாவட்டத்தில் 5 பள்ளிகளும், சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் தலா ஒரு பள்ளியும், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் தலா 2 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல, 30 முதல் 100 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 536 எனவும், 101 முதல் 250 மாணவர்கள் வரை இயங்ககூடிய பள்ளிகள் எண்ணிக்கை 2,183 எனவும், 250 - 1000 மாணவர்கள் வரை 3,047 அரசுப் பள்ளிகளும், 1000 மாணவர்களுக்கு மேல் 472 பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
கடந்தாண்டில் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருந்ததாலும், ஒராசிரியர், ஈராசிரியர் என பள்ளிகள் அதிகளவில் செயல்பட்டு வந்தன. மேலும், தற்காலிகமாக பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகங்களின் மூலம் 14 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் தான் நடப்பாண்டில் அரசுப் பள்ளிக்கான பராமரிப்பு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தற்போது அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பள்ளிகள் துவக்கப்பட்டு, 3 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.