சென்னை: சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 45வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி மற்றும் தேசிய அங்கீகார வாரிய தலைவர் அனில் சஹஸ்ரபுதே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் உயர்கல்வித்துறை செயலாரும், அண்ணா பல்கலைக் கழகத்தின் கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவருமான கோபால் வரவேற்புரை ஆற்றினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் இளங்கலை, முதுகலை ஆராய்சி படிப்புகான பட்டங்களை 503 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் 32 மாணவர்கள், 36 மாணவிகள் என 68 தேர்வர்கள் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர். மொத்தமாக, அண்ணா பல்கலைகழகத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் பி.எச்டி படிப்பில் 435 மாணவர்கள், M.S படிப்பில் ஒருவர், முதுகலை பிரிவு படிப்பில் 20,319 மாணவர்களும், இளநிலை படிப்பில் 94,638 மாணவர்கள் என 1,15,393 பேர் இதில் பட்டங்களை பெற தகுதி பெற்றுள்ளனர்.
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழத்தின் இணை வேந்தரும், உயர்கல்வி துறை அமைச்சருமான கோவி செழியன் பங்கேற்காமல் புறக்கணித்தார். பட்டமளிப்பு விழாவில் அனில் சஹஸ்ரபுதே பேசும்போது, '' அண்ணா பல்கலைக்கழகம் பழமையான மாண்புகளை கொண்டுள்ளது. தொழில்நுட்பக் கல்லூரியாக தொடங்கப்பட்டு சுமார் 200 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இதனுடன் எம்.ஐ.டி, ஏ.சிடெக் உள்ளிட்ட கல்லூரிகள் இணைந்து 1978ம் ஆண்டு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இன்று சுமார் 250 ஏக்கர் நிலம், 3 வளாகங்கள், 31 இளநிலை மற்றும் 81 முதுநிலை படிப்புகள், 480 இணைப்பு கல்லூரிகள், 13,000 முனைவர் பட்ட மாணவர்கள் என இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமாக இருக்கிறது.
இதையும் படிங்க: ‘வெற்றி வாகை’ எனும் தவெக கொள்கை பாடல்: அதில் விஜய் சொல்லியது என்ன?
தேசிய தரவரிசை பட்டியலில் பொறியியல் 13வது இடத்திலும், பொது பல்கலைக்கழக பட்டியலில் இந்தியாவில் அண்ணா பல்கலை முதலிடம் வகிக்கின்றது. மேலும் சர்வதேச தரவரிசை பட்டியலில் 383 வது இடத்திலும் உள்ளது. சுமார் 134 கோடியில் 60க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளும் இந்த பல்கலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கை 2020 அறிமுகப்படுத்தப்பட்டு கல்வியில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக தாய்மொழி கல்வியை வலியுறுத்தியுள்ளது, தற்பொழுது தாய் மொழியில் பொறியியல் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. தமிழில் பொறியியல் படிப்பும் படிக்கலாம். தேசிய அளவில் உயர்கல்வி பயிலும் சதவீதத்தை 50 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் 50 சதவீதத்தை இப்போது தாண்டி விட்டது.
புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியாவில் மாணவர்கள் உலகத்தில் 81 வது இடத்தில் இருந்தனர், கடந்த 9 ஆண்டுகளில் இது 39 வது இடத்திற்கு வந்துள்ளது, இன்னும் சில ஆண்டுகளில் இது உலகின் 10 என்ற வரிசையில் இந்திய மாணவர்கள் வருவர். தொழில்துறை 5.0 தரத்திற்கு மாறி வருகிறது. ரோபோடிக், டேட்டா சயின்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டர் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. முழுமையான ஏ.ஐ தொழில்நுட்பங்கள் நோக்கிய நகர்ந்து வருகிறது.
இந்தியாவில் 2014 வது ஆண்டுக்கு முன்பு வெறும் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன, கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இது 300 சதவீதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதன்படி சூரிய சக்தி மூலம் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் போல ஒரே தேசம் ஒரே தரவு (data) என்ற அமைப்பு பல்கலைகழக மற்றும் கல்லுரி மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பார் ஐடி (apaar id) மூலம் இந்தியாவில் மாணவர் எந்த கல்வி பயின்றாலும் அதன் தரவுகள் இணைய தளத்தின் மூலம் பதிவு செய்யப்படும்.
அதன் மூலம் ஒரு மாணவருக்கு 12 இலக்கம் கொண்ட ஐடி வழங்கப்படும். இந்த ஐடி மூலம் மாணவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடைய கல்வி சான்றிதழ் போன்ற அனைத்தையும் எளிதாக பார்த்துக் கொள்ள முடியும். இதன்மூலம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு செல்வதற்கோ அல்லது உயர் கல்வி படிப்பதற்கோ தங்களுடைய சான்றிதழின் நகலை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இந்த கல்வி சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து எடுத்துக்கொள்ள முடியும். விண்ணப்பிக்கும் பொழுது அதனுடைய நகலை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வசதி வரும் பொழுது மாணவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்'' என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்