சென்னை: சென்னை ஐஐடியும், பர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து நிலையான எரிசக்தி அமைப்புகள் தொடர்பான முதுகலைப் படிப்பைத் தொடங்கியுள்ளன. இந்த புதிய பாடத்திட்டத்தில் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், ஜூன் 24ஆம் தேதி முதல் சேர்க்கைக்கான கடிதங்கள் அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்கள் தற்போது வேகமாக வளர்ந்து வருவதால் புதிய படிப்பில் பட்டதாரிகளாக தேர்ச்சி பெறுவோர் நிபுணர்களாகச் செயல்படுவர். இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து வழங்கும் ஒரே பட்டத்தைப் பெறுவதற்கு மாணவர்கள் சென்னையிலும், பர்மிங்காமிலும் கல்வி கற்பார்கள். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழுக்களுடன் இணைந்து தனிநபர் ப்ராஜக்ட்களை மேற்கொள்வர்.
தற்போதைய சூழலில் சவால்களை எதிர்கொள்வது பற்றி தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். இங்கிலாந்து பல்கலைக்கழகத்திற்குள் பலமுனை எரிசக்தி ஆராய்ச்சிக்கான மிகப்பெரிய ஒருங்கிணைப்பு, அடையாளத்தை வழங்கும் வகையில் தொடங்கப்பட்ட முதலாவது முயற்சியாகும்.
மாணவர்கள் பர்மிங்காம் அல்லது சென்னை ஐஐடியில் தங்கள் படிப்பை நிறைவு செய்யும் வகையில் இப்பாடத்திட்டம் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளது. சென்னை ஐஐடியில் தங்கள் படிப்பைத் தொடங்கும் மாணவர்கள் குறுகிய தொழில்துறை வேலைவாய்ப்புடன் நிறைவு செய்வார்கள்.
அதன்பின்னர், மாணவர்கள் பர்மிங்காமில் ஆராய்ச்சிக்கான ப்ராஜக்ட்டுடன் 12 மாதங்கள் இங்கிலாந்தில் கல்வி கற்கலாம் அல்லது இங்கிலாந்தில் 6 மாதங்கள் கல்வி கற்ற பின்னர், சென்னைக்குத் திரும்பி ஐஐடியில் இப்படிப்பை நிறைவு செய்யலாம். அத்துடன் ஐஐடியில் ஆராய்ச்சிக்கான ப்ராஜக்டையும் மேற்கொள்ளலாம்.
இந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 6ஆம் தேதி முதல் கிடைக்கும். மாணவர்கள் சேர்க்கைக்கான கடிதங்கள் ஜூன் 26ஆம் தேதி முதல் அனுப்பப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் https://ge.iitm.ac.in/uob/sustainable-energy-systems/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இத்திட்டம் குறித்து சென்னை ஐஐடி டீன் (குளோபல் எங்கேஜ்மெண்ட்) பேராசிரியர் ரகுநாதன் ரெங்கசாமி கூறும்போது, "தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான இணைப் பாடத்திட்டத்தைத் தொடர்ந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் சென்னை ஐஐடி இணைந்து புதிய படிப்பை வெற்றிகரமாகத் தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியாளர்கள், தொழில்துறையினர், கொள்கை உருவாக்குவோர் ஆகிய பின்னணிகளுடன் கூடிய ஆராய்ச்சி ஊழியர்கள் மூலம் பாடநெறி உள்ளடக்கம் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் லார்ட் கரன் பிலிமோரியா கூறும்போது, "ரஸ்ஸல் குழுமத்தைச் சேர்ந்த பர்மிங்காம் பல்கலைக்கழகம் உலகின் முதல் 100 கல்வி நிறுவனங்களில் முதன்மையானதாகும். நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுடன் நீடித்து வரும் பிணைப்பு குறித்து பெருமிதம் கொள்கிறோம். இந்த புதுமையான இணை முதுகலைப் படிப்புகள் மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கின்றன. அத்துடன் அவர்களின் கல்வி சாதனைகள் இரு பல்கலைக்கழகங்களாலும் அங்கீகரிக்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார்.