சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கக்கூடிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 21ஆம் தேதி துவங்கியது. முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் மருத்துவகல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7628 பேருக்கும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 1806 பேருக்கும் தற்காலிகமாக 29ஆம் தேதி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, தேசிய மருத்துவ ஆணையம் கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்ப்பதற்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெறுவதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திற்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர விரும்பிய தற்காலிக இடங்களுக்கான ஒதுக்கீடுகள் மீண்டும் தரவரிசை அடிப்படையில் நேற்று இறுதியாக வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில், மாணவர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். அதில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 7 ஆயிரத்து 568 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1,786 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெலுங்கு மைனாரிட்டி கல்லூரியில் 7 பிடிஎஸ் இடங்களும், 321 என்ஆர்ஐ மாணவர்களுக்கான இடங்களும் எம்பிபிஎஸ் படிப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இறுதி ஒதுக்கீட்டு உத்தரவுகளை பெற்றவர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதால் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் திரும்பப் பெற்றது!