திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி அரங்கில் நடைபெற்றது. மொத்தமாக இந்த பட்டமளிப்பு விழாவில் 33 ஆயிரத்து 821 பேர் பட்டங்களைப் பெற தகுதி பெற்றனர். இதில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, தங்கப் பதக்கங்களைப் பெற்ற 111 பேருக்கும், முனைவர் பட்டங்கள் பெற்ற 460 பேர் என மொத்தம் 571 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் ஆண்டறிக்கையை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் வெளியிட்டார். தொடர்ந்து பட்டமளிப்பு விழா பேருரையை தேசிய புவி அறிவியல் துறை இயக்குனர் சலபதி ராவ் நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், ''புதிய கல்வி கொள்கை உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் உள்ள மாணவர்களும், இந்தியாவில் வந்து கல்வி கற்கும் வகையில் இந்திய கல்வி தரம் உயர்ந்துள்ளது. இந்திய கல்வி அமைப்பு மிகப்பெரும் மேம்பாட்டை அடைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி பெரும் வகையில் கல்வி அமைப்பு நாட்டில் செயல்படுகிறது. உயர் கல்வியில் தொடர்ந்து இந்தியா மேம்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு 2047 ம் ஆண்டு கொண்டாடும் போது உலக அளவில் சமூதாய வளர்ச்சி, பொருளாதாரம் போன்றவைகளில் சூப்பர் பவர் என்ற நிலையில் இந்தியா அடையும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை'' என என்றார்.
இதையும் படிங்க: “காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..” - தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!
இந்த விழாவில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி செழியன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த பட்டமளிப்பு விழாவில் தங்க பதக்கம் பெற்ற 111 பேரில், 97 பேர் பெண்கள் என்பதும், முனைவர் பட்டம் பெற்ற 460 பேரில் 377 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்கலைகழகங்களில் முனைவர் பட்டம் பெறுபவர்களில், 337 பேர் இடம் பெற்றிருப்பதும், அதிகளவில் பெண்கள் முனைவர் பட்டம் பெற்றதும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர் புறக்கணிப்பது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் விமர்சனம் தெரிவித்திருந்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்