சென்னை: சென்னை ஐஐடியில் (IIT Madras) கற்பிக்கப்படும் பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்வதற்கு 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 26 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காண்டுப் படிப்பு பல்வேறு கட்டங்களில் வெளியேறும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
மாணவர்கள் அடிப்படை நிலைச் சான்றிதழ், டிப்ளமோ, பிஎஸ் பட்டம் ஆகியவற்றைப் பெற முடியும். தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பு தொழில்துறைக்கு தேவையான திறன்களை வழங்குகிறது.
இந்தியாவில் மின்னணு மற்றும் உட்பொதிக்கப்பட்ட தயாரிப்புகள் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை அதிக அளவில் உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மின்னணுத் தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க இந்தியா செமிகண்டக்டர் மிஷன் திட்டத்துடன் இணைந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி கிடைக்ககூடிய வகையில் பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் படிப்பில் 2024ஆம் மே பருவத்தில் சேர்வதற்காக இம்மாதம் 26ஆம் தேதி வரையில் https://study.iitm.ac.in/es/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பேராசிரியர் போபி ஜார்ஜ் கூறும்போது, "ஆன்லைன் மூலமாக பாடங்களைக் கற்பதையும், உரிய ஆய்வக சோதனைகளை பரிசோதிப்பதையும், நேரடியாகத் தேர்வு எழுதுவதையும் இப்பாடத்திட்டம் ஒருங்கிணைக்கிறது. படிக்க ஆர்வமுள்ள எவரும், எங்கிருந்தாலும் உயர்தரமான கல்வியை அணுகும் வகையில் அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.அனிருத்தன் கூறும்போது, "மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்களும், நினைவலைகளும் இப்பாடத்திட்டத்தில் தனிப்பட்ட நடைமுறை அனுபவங்களை இணைப்பதன் அவசியத்தை உறுதிப்படுத்துகின்றன.
அதிவரைவுக் கல்வியின் சாத்தியக் கூறுகளை வரையறுப்பதில், இந்த முன்முயற்சி குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது. மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடரும்போதே உள்ளகப் பயிற்சி அல்லது வேலைவாய்ப்புகளுக்கு தடையின்றி தகுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
மேலும், "ஆய்வகங்களை கையாள்வது குறித்து பாடத்திட்டத்தில் இரு பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வாராந்திர அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்டு, தங்கள் சோதனைகளை விளக்கும் வீடியோக்களை சமர்ப்பிக்கின்றனர். குறிப்பாக சென்னை ஐஐடி வளாகத்திற்கு மாணவர்கள் நேரில் வந்து சோதனைப் பயிற்சிகளை செய்து தேர்வுகளையும் நிறைவு செய்கின்றனர். அதுமட்டுமின்றி மின்னணு அமைப்புகளைப் பற்றி ஆழமான புரிதலை வளர்க்கும் விதமாகவும் இந்த ஆய்வக அமர்வுகள் இருந்தன" என அனிருத்தன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?